கேரளா : பெண்கள், மாணவிகள், மூத்த குடிமக்கள்… பல்வேறு வாக்குறுதிகள் - ராகுல் காந்தி அறிவிப்பு!

தினத்தந்தி

கேரளாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் மேற்கொண்ட மாநிலம் முழுவதுமான ‘புதுயுக யாத்திரை’ நேற்று திருவனந்தபுரத்தில் நிறைவடைந்தது.

இந்த யாத்திரையின் நிறைவு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் இலவச பஸ் பயணம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அத்துடன், நலத்திட்ட ஓய்வூதியம் மாதம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் முன்னாள் முதல்-மந்திரி Oommen Chandy பெயரில் புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.

சிறு வணிகர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், மூத்த குடிமக்களின் நலனுக்காக தனி துறை உருவாக்கப்பட்டு அதற்கென அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு அமைச்சர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.