எடை குறைக்க நினைப்பவர்களா? பன்னீர் சாப்பிடும் அளவு இதுதான்!

தினத்தந்தி

பன்னீர் சத்தான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தினமும் பன்னீர் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அதன் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். பொதுவாக ஒரு நாளுக்கு 50 கிராமுக்கு மேல் பன்னீர் சாப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு நாளுக்கு 30 கிராமுக்கு மேல் பன்னீர் எடுத்துக்கொள்ள வேண்டாம். அதற்கு மேல் சாப்பிட்டால் கலோரி அளவு அதிகரித்து எடை கூடும் வாய்ப்பு உள்ளது.

பாலில் இருந்து பெறப்படும் உயர்தர புரதச்சத்து பன்னீரிலும் நிறைந்துள்ளது. இந்த புரதம் தசை வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. அதனால் பன்னீர் சைவ உணவாளர்களுக்கு சிறந்த புரத ஆதாரமாக விளங்குகிறது.

பன்னீரை எப்போதும் காலை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது. காலை நேரத்தில் உடல் புரதச்சத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளும். இரவு நேரத்தில் அதிக அளவு பன்னீர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பன்னீரை கடைகளில் வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். பாலை திரியவைத்து அதிலிருந்து கிடைக்கும் பன்னீரை பயன்படுத்தினால், கலப்படம் இல்லாத ஆரோக்கியமான உணவைப் பெற முடியும்.

ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், பன்னீர் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. பால் அலர்ஜி அல்லது லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்களுக்கு பன்னீர் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (IBS) போன்ற வயிற்றுப் பிரச்னைகள் உள்ளவர்களும்பன்னீரை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உடல்நிலை மற்றும் செரிமான திறனைப் பொறுத்து அளவை தீர்மானிப்பது நல்லது.

சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பன்னீர் சாப்பிடலாம். பன்னீரில் உள்ள புரதம் தரமானதாக இருந்தாலும், உடல்நிலைக்கு ஏற்ற அளவை மருத்துவர் பரிந்துரைப்பது முக்கியம்.

பால் அலர்ஜி உள்ளவர்கள் பன்னீருக்கு மாற்றாக சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோபுவை தேர்வு செய்யலாம். பனீரைப் போலவே சுவை கொண்ட டோபுவும் நல்ல புரத ஆதாரமாகும். குறிப்பாக சைவ உணவாளர்களுக்கு, தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய பன்னீர் மற்றும் டோபு போன்ற உணவுகள் சிறந்த தேர்வாக இருக்கின்றன.

தினமும் பட்டாணி சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்!