திருப்பதி லட்டு ஏன் இவ்வளவு சிறப்பு? அதன் பின்னணி என்ன?

தினத்தந்தி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு உள்ளது. பக்தர்களுக்கு உணவு வழங்கும் மரபிலிருந்தே இந்த பிரசாத நடைமுறை உருவானது.

கி.பி. 830-ம் ஆண்டு பல்லவர் ஆட்சிக் காலத்தில், ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அக்காலத்தில் பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு வர பல நாட்கள் எடுத்ததால், தரிசனத்திற்குப் பிறகும் சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்து, திரும்பிச் செல்லும் வரை தேவையான உணவை கோவில் வழங்கியது.

முதலில் 'திருப்பொங்கம்' என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் பிரசாத வகைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

கி.பி. 1445-ல் சுய்யம், 1455-ல் அப்பம், 1460-ல் வடை, 1468-ல் அதிரசம், 1547-ல் மனோஹரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

1803-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் புதிய பிரசாத விநியோக முறையின்படி பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதன் பின்னர் 1940-ம் ஆண்டு முதல் பூந்திக்குப் பதிலாக திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கும் நடைமுறை தொடங்கியது. ஆரம்பத்தில் ஒரு லட்டு எட்டு அணா விலையில் விற்கப்பட்டது.

இன்று திருப்பதி லட்டு உலகப் புகழ்பெற்ற பிரசாதமாக திகழ்கிறது. மேலும், கல்யாண உற்சவ லட்டு என்பது கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் வழங்கப்படும் சிறப்பு பிரசாதமாகும்.

சென்னை வந்தால் இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!