தினத்தந்தி
வீட்டுக்குள் எதிர்பாராத விதமாக பூரான், கரப்பான் பூச்சி போன்ற விஷப் பூச்சிகள் நுழைவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அவற்றைத் தடுக்க எளிதாக இருக்கும்.
பொதுவாக பூரான் போன்ற விஷப் பூச்சிகள் வீட்டுக்குள் வருவதற்கு ஈரப்பதமான சூழல் முக்கிய காரணமாகும். குறிப்பாக குளியலறை, தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் காற்றோட்டம் குறைந்த பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.
இருட்டான இடங்களும் பூரான்களை ஈர்க்கக்கூடியவை. வீட்டில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத பொருட்கள், குப்பைகள் அல்லது அடுக்கி வைக்கப்பட்ட பொருட்கள் இருந்தால், அவை இப்பூச்சிகளுக்கு மறைவிடமாக மாறும்.
சிறிய பூச்சிகள் அதிகம் உள்ள இடங்களில் அவற்றை உணவாக தேடி பூரான்கள் வரக்கூடும். எனவே வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதும் அவசியம்.
கோடை காலங்களில் வெளியில் வெப்பம் அதிகரிக்கும் போது குளிர்ச்சியான இடங்களை தேடியும், மழைக்காலங்களில் பாதுகாப்பான இடங்களை நாடியும் பூரான்கள் வீட்டுக்குள் நுழையலாம்.
சிலர் வீட்டுக்குள் பூரான் வருவதை ஜோதிட ரீதியாகவும் பார்க்கின்றனர். வாழ்க்கையில் மாற்றங்கள் அல்லது கிரகங்களின் தாக்கம் காரணமாக இது நிகழ்கிறது என்ற நம்பிக்கைகளும் சிலரிடம் உள்ளன.
எனினும், இதற்கு அறிவியல் ரீதியாக சூழல் மற்றும் சுத்தமின்மையே முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. எனவே தேவையற்ற அச்சம் கொள்ளாமல் வீட்டின் சுகாதாரத்தை பராமரிப்பது நல்லது.
முக்கியமாக, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. அவற்றை பாதுகாப்பாக அகற்றி, வீடு முழுவதும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியம்.