தினத்தந்தி
அன்றாட உணவில் கீரைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பிரண்டை, முசுமுசுக்கை, முடக்கத்தான், நச்சுக்கொட்டை, காசினி, முக்கரட்டை போன்ற பல்வேறு கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
கீரைகள் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்கும் சிறந்த உணவாகும். தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்க உதவும்.
முருங்கைக்கீரை: முருங்கைக்கீரையில் வைட்டமின்கள், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் பல தாதுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை கண் பார்வையை மேம்படுத்தவும், எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகின்றன.
பருப்புக்கீரை: பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கீரைகளில் பருப்புக்கீரை முக்கியமானது. இதில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும்.
வல்லாரைக்கீரை: இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செல்கள் புத்துணர்ச்சி பெற்று ஞாபக சக்தி மேம்படும். இதில் தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
நச்சுக்கொட்டை கீரை: இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்த இந்த கீரை மூட்டு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க உதவும். குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் நுரையீரல் பிரச்சினைகளையும் சரிசெய்யும் தன்மை கொண்டது.
மணத்தக்காளி கீரை: கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இதன் இலைகளை ஒரு நாளில் 4 முதல் 5 முறை நன்றாக மென்று சாற்றை விழுங்கி வந்தால் வாய் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமாக உதவும்.