தினத்தந்தி
சின்னம்மை நோய் என்பது Varicella-Zoster வைரஸ் காரணமாக ஏற்படும் மிகவும் எளிதில் பரவும் வைரஸ் தொற்று நோயாகும். இது ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது.
இது பாதிக்கப்பட்டவர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளிவரும் காற்றுத் துளிகள் (airborne droplets) மூலம், கொப்பளங்களில் (vesicles) இருந்து வரும் திரவத்தை தொடுவதால், அல்லது அவர்கள் பயன்படுத்திய உடைகள். பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் பரவும்.
இந்நோய் பொதுவாக லேசான காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி, பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் தொடங்கி, பிறகு உடலில் சிறிய நீர் திவளைகள் போன்ற கொப்புளங்கள் தோன்றி, பின்னர் உடலெங்கும் பரவும். ஓரிரு நாட்களில் வெடித்து, பின்னர் உடைந்து காய்ந்து விடும்.
இந்த நோய் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பொதுவாக சிறிய அளவு பாதிப்பைதான் ஏற்படுத்தும் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படலாம்.
பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்: தன் சுத்தம் பேணுதல் அவசியம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளுதல் அவசியம். நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள், சத்தான உணவு உண்ணுதல் வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை அனைத்து கொப்புளங்களும் காய்ந்து விழும்வரை (சுமார் 10-12 நாட்கள்) வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.
நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், படுக்கை விரிப்புகளை, கிருமி நாசினி கொண்டு (அல்லது) சுடு தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.