பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்?

தினத்தந்தி

ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறம்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆப்பிள்களில் விதவிதமான வண்ணங்களும் இருக்கின்றன.

சிவப்பு ஆப்பிளுக்கு அடுத்தபடியாக பச்சை ஆப்பிள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் சிவப்பு ஆப்பிளைப் போலவே ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கக்கூடியது.

சிவப்பு ஆப்பிளை ருசிக்க விரும்பாத குழந்தைகளுக்கு மாற்று தேர்வாக பச்சை ஆப்பிளை கொடுக்கலாம். இந்த ஆப்பிளை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

சிறுவயதிலேயே பல குழந்தைகள் பார்வை குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். பச்சை ஆப்பிளில் பார்வைத்திறனை பலப்படுத்த உதவும் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது.

சிவப்பு ஆப்பிளைப் போலவே இந்த ஆப்பிளின் வெளிப்புற தோல் பகுதியையும் தவிர்க்கக்கூடாது. அதை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் பச்சை ஆப்பிளுக்கு உள்ளது.

எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் உள்ளது. குறிப்பாக இந்த ஆப்பிள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பைத் தடுக்க உதவுகிறது.

தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரல் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு ஆஸ்துமா ஏற்படும் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.

பச்சை ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும்.

பச்சை ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. செரிமான செயல்பாட்டையும் மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது.

பச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய உணவுக்கு இடையில் சாப்பிடலாம். ஆனால் இரவில் சாப்பிடுவது குடல் இயக்க செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும். மேலும் வாயு தொல்லை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சிறுநீரக கற்கள் கரைய எளிய வழிமுறைகள்!