Subash
பிரிட்ஜின் பிரீஸரில் ஐஸ் கட்டிகள் உறைந்து சில சமயங்களில் பனி மலை போல் குவிந்திருக்கும். அடிக்கடி அதுபோல் ஐஸ் கட்டிகள் குவிய தொடங்கினால் பிரிட்ஜ் பராமரிப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
முக்கியமாக பிரிட்ஜின் வெப்பநிலை அளவை பருவ காலங்களுக்கு ஏற்ப மாற்றி அமைப்பது அவசியம். குறிப்பாக வெயில், மழை, பனி காலங்களில் அதற்கேற்றவாறு வெப்பநிலையை பராமரிக்க வேண்டும்.
பிரீஸரின் வெளிப்பகுதியில் அமைந்திருக்கும் `கூலிங் கண்ட்ரோல்' ஆப்ஷனை பருவ காலங்களுக்கு ஏற்ப சரியான அளவில் தேர்ந்தெடுக்க வேண்டும். பனிக்கட்டிகள் அதிகமாகி பனி உருவாகி விட்டால் கூலிங் பட்டன் ஆப்ஷனை அழுத்தி அதனை உருக வைத்துவிட வேண்டும்.
அடிக்கடி பிரீட்ஜை திறப்பதையும், நீண்ட நேரம் திறந்து வைப்பதையும் தவிர்க்க வேண்டும். அப்படி திறந்த நிலையில் இருக்கும்போது வெளிக்காற்றில் படிந்திருக்கும் ஈரப்பதம் பிரிட்ஜிக்குள் சென்றுவிடும். அது பிரீஸருக்குள் நுழைந்தால் பனிக்கட்டி உருவாகும் அளவு அதிகரிக்க தொடங்கிவிடும்.
பிரீஸருக்குள் சூடான பொருட்களை வைக்கக்கூடாது. அத்துடன் பிரீஸருக்குள் எந்தெந்த பொருட்களை வைக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு அவற்றை மட்டும் வைப்பதற்கு பழகுங்கள்.
பிரீஸருக்குள் பெரிய பாத்திரத்தை வைத்துவிட்டு அதனுள் சிறிய பொருட்களை வைப்பதை தவிருங்கள். பிரீஸரின் அளவுக்கு ஏற்பவே பொருட்களை வைக்க வேண்டும். அதனுள் அதிக பொருட்களை நுழைக்கக் கூடாது.
பிரீஸருக்குள் வைத்த பொருட்களை உடனே சாப்பிடும் வழக்கத்தை தவிருங்கள். அதன் குளிர்த்தன்மை குறையும் வரை காத்திருந்து அதன் பிறகு உட்கொள்ளுங்கள்.
பிரிட்ஜ் மற்றும் பிரீஸருக்குள் பொருட்களை சீராக அடுக்கி வையுங்கள். அவை எளிதில் எடுக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் உடனே திறந்து மூடுவதற்கு வசதியாக இருக்கும். வெளிக்காற்று உள் நுழைவது தவிர்க்கப்படுவதுடன் மின்சார செலவும் குறையும்.