நடிகரிலிருந்து துணை முதல்வர் வரை - உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம்!

தினத்தந்தி

உதயநிதி ஸ்டாலின் 2012-ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

2018-ஆம் ஆண்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்த அவர், மக்கள் தொடர்பை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களுடன் நேரடியாக உரையாடினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவரது எளிய பேச்சு நடை மற்றும் மக்களோடு பழகும் விதம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற அவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2022 டிசம்பர் 14-ஆம் தேதி தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து இளைஞர்களிடம் ஆதரவைப் பெற்றார்.

சில மாதங்களாக அவரை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதற்கு முதலில் மு. க. ஸ்டாலின் “இன்னும் நேரம் வரவில்லை” என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசியலில் முக்கியமான பதவியை அவர் வகிக்கிறார்.

இந்தியாவில் முதல்முறையாக துணை முதல்வர் பதவியை வகித்தவர் அனுக்ரஹ நாராயண் சின்ஹா ஆவார். அவர் பீகார் மாநிலத்தில் 1937–1939 மற்றும் 1946–1952 காலகட்டங்களில் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

மேலும் நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜ்யோதி பாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, எஸ். எம். கிருஷ்ணா, சித்தராமையா, எடியூரப்பா உள்ளிட்ட பலரும் இந்தியாவின் பல மாநிலங்களில் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளனர்.