
அயோத்தி கோவில்: ராம தர்பார் மண்டபம், பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் 300 பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
அயோத்தி,
ராம பிரான் பிறந்த அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு உள்ளது. 2.72 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளம், 235 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் கடந்த ஆண்டு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட்டது.
கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டபோதும், அதன் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. குறிப்பாக 3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் முதல் தளத்தில் ராம தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டு வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்ததால் கடந்த 5-ந்தேதி இந்த தர்பார் மண்டபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அத்துடன் கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு சிறிய கோவில்களுக்கும் அன்று கும்பாபிஷேகம் நடந்தது.
ராம தர்பார் மண்டபம் பிரதிஷ்டை முடிவடைந்த நிலையில், அதை பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதி பெற்றதை தொடர்ந்து, பக்தர்களை அனுமதிக்க நேற்று முன்தினம் இரவில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முதல் கோவிலின் முதல் தளத்தில் உள்ள ராம தர்பாரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இதற்காக அனுமதி 'பாஸ்'கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் 300 பாஸ்கள் வழங்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் அறக்கட்டளை சார்பில் தலா 150 பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இதில் 100 பாஸ்கள் சிறப்பு தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ராம தர்பார் மண்டபத்தில் ராம பிரான் சிலையுடன், சீதா தேவி, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன், அனுமன் உள்ளிட்டோரின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ன. இதைத்தவிர சிவபெருமான் சிலை வடகிழக்கு மூலையிலும், விநாயகர் சிலை தென்கிழக்கு மூலையிலும், சூரிய கடவுள் சிலை தென்மேற்கு மூலையிலும் பகவதி சிலை வடமேற்கு மூலையிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.
ராம தர்பார் மண்டபம் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டதன் மூலம் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவின் முக்கிய படியாக அமைந்திருப்பதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.