
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் - இன்று முதல் அமல்
|கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்த்து பாடம் கற்க வசதியாக பள்ளி வகுப்பறைகளில் ‘ப' வடிவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
சென்னை,
கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதனை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
அதன்படி, இதுபோல் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எளிதான அணுகுமுறை உருவாகும். ஆசிரியர்கள் மாணவர்களை உன்னிப்பாக கண்காணிக்க முடியும். ஆசிரியர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்பதில் இருக்கும் சிரமம் குறையும் என கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
மேலும் இருக்கைகள் அமைக்கப்படுவது போல, அதற்கேற்ற காற்றோட்ட வசதி, ஒளி வசதி ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கவும், `கடைசி பெஞ்ச்' முறையை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.