மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தொலைதூரப் பயணம் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தார் ஒத்துழைப்புச் செய்வர்.
22.01.2021 முதல் 28.01.2021 வரை
புதிய பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். நண்பர்களும், உறவினர்களும் உதவியாக இருப்பார்கள். அலுவலகத்தில் பணிபுரிவோர், தற்காலிக இடமாறுதலில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். தொழிலில் ஓய்வின்றி உழைத்தாலும், ஆதாயம் எதிர்பார்த்த அளவு இருக்காது. குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு தீபமிட்டு வழிபடுங்கள்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
மேஷ ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். 9-க்கு அதிபதியான குரு பகவான், உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தைப் பார்க்கின்றார். எனவே சென்ற மாதத்தை விட இந்த மாதம், சிறப்பாகவும் செல்வநிலை உயரும் விதத்திலும் அமையும்.
அஷ்டமத்தில் கேது
இம்மாதம் தன ஸ்தானத்தில் ராகு இருப்பதால் பற்றாக்குறை தீரும்.பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறப் போகின்றது. ஆனால் கேது எட்டில் இருப்பதால் பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாமல் போகலாம். ஆன்மிகப் பற்று அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகள் அல்லது வழிபாட்டு முறைகளுக்காக, வரவில் ஒரு பகுதியை செலவழிப்பீர்கள்.
பலம் பெறும் தொழில் ஸ்தானம்
பொதுவாக இந்த மாதம், தொழில் ஸ்தானம் எனப்படும் 10-ம் இடம் பலம் பெற்றிருக்கின்றது. சுக ஸ்தானாதிபதி சந்திரனும், பஞ்சம ஸ்தானாதிபதி சூரியனும் 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனும், 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவும், 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனியும் ஒரே இடத்தில் பலம்பெற்று கூட்டுக் கிரக யோகத்தை வழங்குகின்றார்கள். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். அரசு அல்லது வங்கிகளின் வழியில் உதவி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திற்கு, ஊதிய உயர்வோடு மாறுதல் வரலாம்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை, மகர ராசியில் புதன் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை சகோதர மற்றும் சகாய ஸ்தானத்திற்கும், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பவர், புதன். எனவே வழக்குகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். வீண் விவகாரங்கள் தலையெடுக்கலாம். நீங்கள் செய்யும் முயற்சிகளை யாரிடமாவது, முன்னதாகவே தெரிவித்தால் அது நடைபெறாமல் போகக்கூடும். பிப்ரவரி 10-ந் தேதி புதன் வக்ர நிவர்த்தியாகின்றார். அதன்பிறகு உத்தியோக முயற்சி கைகூடும்.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும் சனியோடு இணைந்திருப்பதால் ‘நீச்ச பங்க ராஜயோக’த்தை உருவாக்குகின்றார். அப்படிப்பட்ட குரு பகவான் ஜனவரி 22-ந் தேதி முதல் அஸ்தமனம் அடைகின்றார். எனவே, தந்தை வழியில் விரோதங்கள் வரலாம். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றங்கள் ஏற்படலாம்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகரத்திற்கு சுக்ரன் செல்கின்றார். தன சப்தமாதிபதி தொழில் ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம், யோகமான நேரமாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வாழ்க்கைத் துணையின் வேலைக்காக செய்த முயற்சி கைகூடும். இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 16, 17, 23, 24, 28, 29, பிப்ரவரி: 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலத்திற்காக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளும், பெற்றோர்களும் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்
(அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கு)
மேஷ ராசி நேயர்களே!
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆங்கிலப் புத்தாண்டு வந்துவிட்டது. வருடத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிக்கு 2-ம் இடமான வாக்கு, தனம், குடும்பம் என்பதை எடுத்துரைக்கும் இடத்தில் குருவின் பார்வை பதிகின்றது. அதுமட்டுமல்ல ராசிநாதன் செவ்வாய், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். சுக ஸ்தானாதிபதி சந்திரன் சுக ஸ்தானத்திலேயே இருக்க, தொழில் ஸ்தானாதிபதி சனி தொழில் ஸ்தானத்திலேயே பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். பொருளாதாரம், சுகம், தொழில் ஆகிய மூன்று ஸ்தானங்களும் சிறப்பாக அமைந்து ஆண்டு தொடங்குவதால், இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமையப்போகின்றது.
குருச்சந்திர யோகத்தோடும், நீச்ச பங்க ராஜயோகத்தோடும் ஆண்டின் தொடக்கம் அமைகின்றது. நீச்சம் பெற்ற குரு, சொந்த வீட்டில் பலம்பெற்ற சனியோடு சஞ்சரிப்பதால் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே சென்ற ஆண்டு தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும். தனவரவிற்கு பஞ்சம் ஏற்படாது.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். சென்ற ஆண்டில் ஏற்பட்ட ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் குறையும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். 2-ல் ராகு இருப்பதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ‘வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல நேரம் வந்து விட்டது. பணப்பற்றாக்குறை அகலும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். அஷ்டமத்தில் கேது, சுக்ரனோடு கூடியிருக்கின்றார். எனவே ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
பஞ்சமாதிபதி சூரியன் 9-ம் இடத்தில் இருக்கின்றார். எனவே பெற்றோர் வழியில் பிரியம் கூடும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் பலம்பெற்றிருக்கின்றன. புதன், வியாழன், சனி ஆகியவை ஒன்று கூடி கூட்டுக்கிரக யோகமாக தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தொழில் கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் வாய்ப்பு உருவாகும். உங்கள் நீண்ட நாளையக் கனவுகள் நனவாகும்.
மேலும் இந்த புத்தாண்டில் பொருளாதார மேம்பாடு அதிகரிக்கவும், நோய், நொடி இல்லாத வாழ்க்கை அமையவும் உங்கள் சுய ஜாதகத்தில் தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை யோகபலம் பெற்ற நாளில் செய்து வருவது நல்லது.
மகர குருவின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. அவர் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பிதுர் ரார்ஜித ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் குரு. அவர் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, ஒரு சிலர் தந்தை வழி சொத்துக்களை விற்று, அதன் மூலம் வரும் தன லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவுசெய்ய முயற்சிப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் பழக்கத்தால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் கூட மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு.
குருவின் பார்வை பலன்கள்
2021-ம் ஆண்டில் மகரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 3, 5, 7 ஆகிய இடங்களில் குருவின் பார்வை பதிகின்றது. மகர குருவின் சஞ்சார காலத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். மக்கள் செல்வாக்கால் மகிழ்ச்சி கூடும்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில் அதன் பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் வழியில் தொழில் தொடங்கும் முயற்சி ஒரு சிலருக்கு கைகூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ திருமண முயற்சியில் தடைகளும், தாமதங்களும், தடுமாற்றங்களும் ஏற்பட்டிருந்தால் அது இனிமாறும். வாசலோடு நின்ற வரன்கள் இனி வீட்டிற்குள் வந்து பொருந்திய செய்தியை எடுத்துரைக்கும். மேலும் பெற்றோர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவற்றையும், பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களையும் நடத்தும் யோகம் உண்டு.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் விரயாதிபதி, லாப ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் லாபங்கள் அனைத்தும் விரயமாகி விடும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், சொந்த ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு செல்ல முடியாமலும் ஆகும் சூழ்நிலைகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்க இயலாது. பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். சேமிப்பு கொஞ்சம் கரையலாம். சிக்கனத்தைக் கையாண்டு தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் தொழிலில் மிகுந்த கவனம் தேவை. தொழில் மாற்றங்களும், தொழில் நிலையத்தில் இடமாற்றங்களும் ஏற்படலாம். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மறுப்பர். ‘எங்களுக்குரிய பங்கை கொடுத்து விடுங்கள். நாங்கள் விலகிக்கொள்கிறோம்’ என்று அச்சுறுத்துவர். நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் பகை ஏற்படும். பக்கத்தில் பணிபுரிபவர்களால் சிக்கல்கள் உருவாகும். ‘வேலை போய்விடுமோ’ என்ற பதற்றம் அதிகரிக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழிலில் எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும், மூன்றாம் நபர்களின் குறுக்கீடுகள் அதிகரிக்கும். சூடுபிடித்த வியாபாரம் மந்த நிலைக்கு வரலாம். ‘பிறரின் திருஷ்டி பட்டுவிட்டதோ’ என்று நினைப்பீர்கள். சொத்துத் தகராறுகள் தலைதூக்கும். சொந்தங்களுக்குள் சர்ச்சைகள் வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த உறவில் விரிசல்கள் ஏற்படும். புதியவர்களை நம்பி, பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலைப்பளு கூடும். புதிய முயற்சிகள்் செய்யும் பொழுது, முன்னதாக அதைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் திடீரெனப் பாதிப்புகள் ஏற்படலாம்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, மிதுனச் செவ்வாய் மகரச் சனியைப் பார்க்கிறார். மீண்டும் 4.6.2021 முதல் 21.7.2021 வரை கடகச் செவ்வாய் மகரச் சனியைப் பார்க்கின்றார். இக்காலம் செவ்வாய்-சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் மக்கள் அனைவருமே கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். அதே நேரம் உங்கள் ராசிநாதனாக செவ்வாய் அமைவதாலும், தொழில் மற்றும் லாப ஸ்்தானத்திற்கு அதிபதியாக சனி விளங்குவதாலும் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. சிறு தொல்லைகள் வந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினை கொடிகட்டிப் பறக்கும். குறுக்கீடு சக்திகள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு இருமடங்கு உண்டு. அனுபவஸ்தர்களின் ஆலோசனையும், அருளாளர்களின் வழிகாட்டுதல்களும், இந்த காலகட்டத்தை இனிமையாக அமைத்துக்கொடுக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் முருகப்பெருமான் வழிபாட்டை முறையாகச் செய்து வருவதோடு, யோகபலம் பெற்ற நாளில் அங்காரக தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு வளர்ச்சி கூடுத லாக இருக்கும். வாய்ப்புகள் வந்து அலைமோதும். கொடுக்கல் -வாங்கல்களில் திருப்தி ஏற்படும். குரு பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். தாய் மற்றும் சகோதரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். செவ்வாய் - சனி பார்வை காலத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்திலும் மிகமிக கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
மகரத்தில் வருகிறது சனி மகத்தான பலன் கிடைக்கும் இனி! மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். இதனால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனியும் சேருவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. எனவே சனியால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்க, குருவின் அனுகூலமும் கைகொடுக்கும்.
தொழிலில் பணவரவு கூடும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் ஆற்றல் சனி பகவானுக்கு உண்டு. எனவே தொழிலில் லாபத்தை அள்ளிக்கொடுப்பர். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி பூமி, சுகம், தாய், கல்வி, வியாபாரம், களத்திரம், பயணம், விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் 4-ம் இடத்தில், சனியின் பார்வை பதிவதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடிவரும். ஏற்கனவே பேசி கைவிடப்பட்ட வரன்கள், மீண்டும் தேடிவரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களோடு மனம் விட்டுப் பேசி சில பிரச்சினைகளுக்கு நல்ல முடிவெடுப்பீர்கள். சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங் கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். சூரியன் 5-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவரது சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பொதுவாழ்வில் புகழ்கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சந்திரன். எனவே இக்காலத்தில் இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் போது, ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். லாபமும் கிடைக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். உறவினர்கள் பகை உருவாகலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ஜென்ம குருவாக வருவதால் இடமாற்றங்களும், ஊர்மாற்றங்களும் ஏற்படலாம்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியாகும்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அதன்படி உங்கள் ராசிக்கு, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வருவதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை. வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.
வெற்றிக்குரிய வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்குரிய ‘கருநிறக் காகம் ஏறி..’ என்ற சனி கவசப் பாடலைப் பாடி வழிபடுங்கள். அதோடு ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து அருகம்புல் மாலையும், வெற்றிலை மாலையும் அணிவித்து வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி பகவான் வக்ரமடைகின்றார்.
தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதி வக்ரமடைவது அவ்வளவு நல்லதல்ல. மிகுந்த கவனம் தேவை. எதிரிகள் பலம் கூடும். பிறருக்கு பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். விரயம் உண்டு. தைரியமும், தன்னம்பிக்கையும், தெய்வ பலமும் உங்களுக்கு கைகொடுத்து உதவும். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பெயர்ச்சியாக அமையப்போகின்றது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொடுப்பர். பணிபுரியும் பெண்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சனியின் வக்ர காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திலும், பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கை கூடும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
இரண்டில் ராகு வருகிறது..எதிர்பார்ப்புகளில் இனி வெற்றி..
மேஷ ராசி நேயர்களே!
வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல, நவக்கிரகங் களில் பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகுவும், கேதுவும் வரும் செப்டம்பர் 1-ந் தேதி மாற்றமடைகின் றார்கள். மிதுனத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் ரிஷப ராசிக்கு வரப்போகின்றார். அதே நாளில் தனுசு ராசியில் சஞ்சரித்து வந்த கேது பகவான் விருச்சிகத்திற்கு வரப்போகின்றார். அதாவது 2-ம் இடத்தில் ராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் சஞ்சரிக்கப் போகின்றார்கள்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகின்றார். அதன்பிறகு டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு சனி செல்கின்றார். 2021-ம் வருடம் நவம்பர் 13-ந் தேதி குரு, கும்ப ராசிக்குச் செல்கின்றார். ராகு-கேது பெயர்ச்சிக்கு இடையில் மேற்கண்ட மூன்று கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறப்போவதால் அவற்றைக் கருத்தில் கொண்டும், கோச்சாரப் பலன்களை அடிப்படையாக வைத்தும் உங்கள் சுய ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் பலம் அறிந்தும் பலன்களை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
குடும்ப ஸ்தானத்தை பலப்படுத்தும் ராகு!
கொடுத்த பணத்தை செலவிட வைக்கும் கேது!
ராகு இப்பொழுது சஞ்சரிக்கப் போகும் 2-ம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். அந்த இடத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகுவால் நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வரப்போகின்றது. இல்லறம் நல்லறமாக மாறும். எதிர்பார்த்தபடியே வரவுகள் வந்து சேரும். வாரிசுகளால் ஏற்பட்ட கவலை மாறும்.
8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள், வீடு மாற்றங்கள் போன்றவை கிடைக்கும். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும், பிறகு தானாக நடைபெற்றுவிடும். உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ சிறுசிறு மருத் துவச் செலவுகள் ஏற்படலாம். வீண் விரயங்களில் இருந்து விடுபட, சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிநாதனான செவ்வாய், தைரியகாரகன் என்பதால் இந்த காலகட்டத்தில் உங்களது தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும் கிடைக்கலாம்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சந்திரன். அது மட்டுமல்லாமல் தாய், வாகனம், வீடு, கல்வி, பயணங்கள், காரியவெற்றி, திறமை, நம்பிக்கை, சேமிப்பு ஆகியவற்றையும் குறிக்கும் இடங்களாகும். எனவே கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். திருமண முயற்சிகளும் கைகூடும். புதிய வாகனங்கள், வீடு, இடம் போன்றவை வாங்குவதற்கான அறிகுறி தென்படும். பரம்பரை சொத்துக்களை கொடுத்துவிட்டுப் புதிதாக கட்டப்பட்ட வீடுகளைக் கூட ஒருசிலர் வாங்க நேரிடும்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், பிள்ளைகள் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறும். பொதுவாக உங்கள் ராசிக்கு 5-ம் இடம் சூரியனுடைய வீடாகும். ஆனால் அவர் தன் சாரத்தில் பகை கிரகமான ராகு சஞ்சரிக்கும் பொழுது திருப்தியான பலனைக் கொடுக்க மாட்டார். எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வதும், தேக நலனில் அக்கறை காட்டுவதும் அவசியம்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
கேது பகவான் முதலில் புதன் சாரத்திலும், பிறகு சனி சாரத்திலும், அதன்பிறகு குரு சாரத்திலும் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக கிடைக்கும் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம்(1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, சகோதர சச்சரவுகள் உருவாகி மறையும். 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். ‘சகோதர’ சகாய ஸ்தானம் மற்றும் எதிர்ப்பு, வியாதி, கடன், ஜீவனம் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கும் புதனே அதிபதி. எனவே மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கலாம். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பஞ்சாயத்துக்களில் பொறுமை அவசியம்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவருடைய சாரத்தில் கேது வரும்பொழுது, தொழில் மாற்றச் சிந்தனைகள் அதிகரிக்கும். வாங்கல்-கொடுக்கல்களில் கொஞ்சம் கவனம் தேவை. ‘கிடைத்த வேலை நிரந்தரமாகவில்லையே’ என்றும் ஒருசிலர் கவலைப்படலாம். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்பில் தாமதம் ஏற்படுவதால் ‘கூட்டுத்தொழில் செய்யலாமா?’ என்று சிந்திப்பீர்கள். அதே சமயம் புதிய கூட்டாளிகள் இணைவதிலும் திருப்தி ஏற்படாது.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு பகவான், உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே அவரது சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது வருமானம் வந்த மறுநிமிடம் செலவாகி விடும். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றங்கள் ஏற்படலாம். ஒருசிலருக்கு வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடு போன்ற நீண்ட தூரப்பயணங்கள் உருவாகலாம். ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இரண்டாமிடத்து ராகுவால் இனிய பலன் கிடைக்கவும், அஷ்டமத்து கேதுவால் ஆரோக்கியத் தொல்லை அகலவும் ராகு- கேதுக்களுக்கு உரிய நாக கவசப்பாடலைப் பாடி இல்லத்துப் பூஜை அறையில் வழிபடுவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது ஆலயங் களுக்குச் சென்று துர்க்கையை வழிபடுவதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபட இயலும்.
பெண்களுக்கு...
இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக்கொள்ள தன்னம்பிக்கையும், தைரியமும் தேவை. திருமண வாய்ப்பும் சிலருக்கு உண்டு. கேது பலத்தால் திட்டமிட்ட பணிகளில் தேக்க நிலை உருவாகும். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வாகனம் வாங்கக் கடனுதவி கிடைக்கும். சர்ப்ப விநாயகர் வழிபாடு பலன் தரும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
பத்தில் வந்தது குரு பகவான், பதவியில் மாற்றம் உருவாகும்!
மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கு சுமார் ஓராண்டு காலம் வீற்றிருந்து, அதன் பார்வை பலனால் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். இடையில் சில மாதங்கள் 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கும் செல்கின்றார். குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். பொதுவாக ‘10-ல் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும்’ என்பார்கள். நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தாலும், தொழில் செய்பவராக இருந்தாலும் மாற்றங்கள் வரத்தான் செய்யும். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்களுக்கு, நல்ல மாற்றங்கள் வரலாம். விரும்பத்தகாத மாற்றங்கள் வருமேயானால், வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குருவை வழிபடுவதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ளலாம்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகின்றார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் குடும்ப ஸ்தானம் பலப்படுகின்றது. குடும்பத்தில் கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால், பகையை வெல்லக்கூடிய ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். எதிரிகள் உதிரிகளாவர்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம்(15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானாதிபதியானவர், சூரியன். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பூர்வ புண்ணியத்தின் பயனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்துசேரும். பாகப்பிரிவினைகள் அனைத்தும் சுமுகமாக முடியும்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு சுக ஸ்தானாதிபதியாவார். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த நன்மைகளைச் செய்வார். குறிப்பாக தாய்வழி ஆதரவு கிடைக்கும். பெற்றோர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான், உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாரத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். ‘குரு மங்கள யோகம்’ அடிப்படையில் இல்லத்தில் மங்கல காரியங்கள் நிறைய நடைபெறும். பெற்றோர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா, பெண் குழந்தைகளின் பூப்புனித நீராட்டுவிழா, திருமண வைபவங்கள் அடுக்கடுக்காக நடைபெறும் வாய்ப்புண்டு. சுபவிரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில், அதற்கேற்ப வருமானமும் வந்து கொண்டேயிருக்கும். செவ்வாய் உங்கள் ராசிநாதனாக மட்டுமல்லாமல் அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். எனவே இக்காலத்தில் இடமாற்றங்கள், வீடுமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் கூட ஏற்படலாம்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே சகோதர ஒற்றுமை பலப்படும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வழக்குகள் சாதகமாக அமையும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். அதுமட்டுமின்றி லாப குருவின் ஆதிக்கத்தால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ‘படித்தும் வேலை இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கும் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கலாம். அல்லது சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டலாம். எப்படி இருந்தாலும் இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவலும் வரும் நேரமிது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே இக்காலத்தில் நிதானமும், பொறுமையும் அவசியம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. நேர்மறை சொற்களையே அதிகம் உபயோகப்படுத்துங்கள். அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். பிடிவாத குணத்தை தளர்த்திக்கொள்ளுங்கள். கோபத் தைக் குறைத்துக்கொள்வதன் மூலம் முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். சேமிப்புகள் கரையலாம். தொழிலில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணி மாற்றங்கள் திடீரென வரலாம். வழிபாட்டின் மூலம் நன்மைகள் ஓரளவு கிடைக்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் பஞ்சமுக விளக்கேற்றி கற்பக விநாயகர் படம் வைத்து, ஆனைமுகனுக்குரிய துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவது நல்லது. மேலும் வியாழக்கிழமை விரதமிருந்து குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும். வருங்காலமும் நலமாகும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி தொழில் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றமும் கிடைக்கலாம். திசாபுத்தி பலம் பெற்றவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். தாய், தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு. பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் மட்டுமல்லாமல், மேற்படிப்பு சம்பந்தமாகவும் நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி தரும். வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/27/2021 9:10:00 PM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Aries