யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல்-வாங்கல்களில் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. பிறருக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்க்கவும்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
கடக ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் எந்த ஒரு புது முயற்சியில் ஈடுபட்டாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்ளுங்கள். மருத்துவச் செலவு ஏற்படலாம்.
பஞ்சம கேதுவின் ஆதிக்கம்
சர்ப்பக் கிரகமான கேது, இம்மாதம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். 5-ம் இடம் புத்திர ஸ்தானமாகவும் கருதப்படுவதால், பிள்ளைகள் பற்றிய கவலை மேலோங்கும். அவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதில் அக்கறை காட்டுவீர்கள். கடன் சுமையால் ஒரு சில சொத்துக்களை விற்க நேரிடும். அதே நேரம் லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதால், பண நெருக்கடி அகல, புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பயணங்களில் இடையூறு இருக்கும்.
கண்டகச் சனியின் ஆதிக்கம்
உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களும், கூட்டுக்கிரக யோகத்தை வழங்குகின்றன. ராசிநாதன் சந்திரன், ராசியைப் பார்ப்பது யோகம்தான். ஏழாமிடத்தில் சனி சஞ்சரிப்பதால், அதை ‘கண்டகச்சனி’ என்று சொல்வது வழக்கம். எனவே உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் உட்பூசல்கள் அதிகரிக்கும். விரயாதிபதி புதன், சனியோடு இணைந்திருப்பதால் சகோதர வழியில் விரயங்கள் ஏற்படும்.
மகர - புதன் வக்ரம்
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் ஜனவரி 21-ந் தேதி வக்ரம் பெறுகின்றார். பிப்ரவரி 10-ந் தேதி வக்ர நிவர்த்தியாகின்றார். இந்த காலகட்டத்தில் சகோதர ஒற்றுமை குறையலாம். வழக்குகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிர்பாராத இடமாற்றங்களால் மனக்கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருக்கின்றார். இருப்பினும் சனியோடு இணைந்து நீச்ச பங்கம் அடைகின்றார். ஜனவரி 22-ந் தேதி அவர் மேலும் வலிமை இழக்கின்றார். எனவே தந்தை வழியில் அனுகூலங்கள் குறையலாம். 6-ம் இடத்திற்கு அதிபதியான குரு பகவான் வலிமை இழக்கும் பொழுது, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது வாகன யோகம் வரும். புகழ்மிக்கவர்களால் சில காரியங்களை சாதிப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ‘கட்டிடம் கட்டியும் வாடகைக்கு ஆள் வரவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அந்தக் கவலை மறையும்.
இம்மாதம் தைப்பூசம், செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 19, 20, 24, 25, 30, 31, பிப்ரவரி: 3, 4 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் அதைவிட கூடுதலாக இருக்கும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எந்தவொரு வேலையையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் சென்றால், பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
யோகமான ஆண்டு இது
(புனர்பூசம், 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)
கடக ராசி நேயர்களே! பிறக்கப்போகும் புத்தாண்டு உங்களுக்குப் பெருமைகளைச் சேர்க்கும் ஆண்டாக அமையப் போகின்றது. ஆண்டின் தொடக்கத்திலேயே உங்கள் ராசியை, குரு பகவான் முழுமையாகப் பார்க்கின்றார். எனவே வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன் சுமை தீரும். சென்ற ஆண்டில் நடைபெறாமல் ஸ்தம்பித்து நின்ற காரியங்கள், இப்பொழுது துரிதமாக நடைபெறும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சந்திரன், உங்கள் ராசியிலேயே சஞ்சரித்தபடி புத்தாண்டு தொடங்குகின்றது. எனவே குடும்ப ஒற்றுமை பலப்படும்.
குருச்சந்திர யோகத்தோடும், நீச்சபங்க ராஜயோகத்தோடும் இந்த ஆண்டின் தொடக்கம் அமைகின்றது. நீச்சம் பெற்ற குருவாக இருந்தாலும் கூட, அவரது பார்வைக்கு பலன் கிடைக்கும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6-ம் இடத்திற்கு அதிபதியானவர் குரு. எனவே அவர் வலிமை இழக்கும் பொழுது உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருந்து விலகினாலும் நிர்வாகம் மீண்டும் உங்களை அழைக்கலாம்.
புத்தாண்டின் தொடக்க நிலை
ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் பலம் பெற்றிருக்கின்றார். அதே நேரம் தனாதிபதி சூரியன் 6-ல் மறைந்திருக்கின்றார். இருப்பினும் 6-க்கு அதிபதியான குரு பகவான், சப்தம ஸ்தானத்தில் நீச்சம் பெற்று ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப பலன் தரப்போகின்றார். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சுயஜாதகம் பலம் பெற்றிருந்தால், கோட்சார பலன்களின் குறுக்கீடு எதுவும் செய்யாது. திசாபுத்தி பலம் இழந்தவர்களுக்கு திடீர் மாற்றங்களும், மகிழ்ச்சி குறைவான தகவல்களும் வரலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறுகள் உருவாகும். பஞ்சம ஸ்தானத்தில் கேது இருக்கின்றார். எனவே பிள்ளைகளால் பிரச்சினை ஏற்பட்டு அகலும். ‘ஞானகாரகன்’ கேது, செவ்வாய் வீட்டில் இருப்பதால் பூமி விற்பனையும், அதன் மூலம் எதிர்பார்த்த லாபமும் வரும். என்றாலும், அந்தத் தொகை உடனடியாக விரயமாகும் சூழ்நிலை காணப்படுகிறது.
வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறலாம். 3, 12-க்கு அதிபதியான புதன், 7-ல் இருப்பது நன்மைதான். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சனியின் பலம் 7-ல் இருப்பதால் கண்டகச் சனியாக பரிணமிக்கின்றார். எனவே விரயங்கள் இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும். அதே நேரம் வருமானமும் உங்களுக்கு செலவிற்கேற்ற விதம் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. இருப்பினும் குருவோடு சனி இணைந்திருப்பதால் பயப்படத் தேவையில்லை. உங்கள் ராசிக்கு யோககாரகனாக விளங்கும் செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால், வீழ்ச்சியில் இருந்து எழுச்சியடையும் யோகம் உண்டு.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கின்றார். உங்கள் ராசியைப் பார்ப்பதால் மனக்கவலை அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். தற்சமயம் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கு அதிபதியான குரு நீச்சம் பெறும்பொழுது, அவற்றின் தாக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட இயலும். குறிப்பாக எதிரிகளின் தொல்லை குறையும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொல்லை தந்த நோய்கள் அகலும். கடன் சுமை குறையும்.
9-ம் இடத்திற்கும் அதிபதியாக குரு விளங்குவதால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். முன்னோர்களின் சொத்துக்களை முறை யாக பிரித்துக்கொடுக்க முன்வருவர். அண்ணன், தம்பிகளின் அரவணைப்பு உண்டு. இதுவரை உங்களைவிட்டு விலகி இருந்த சகோதரர்கள் இப்பொழுது மீண்டும் வந்திணையலாம். ஆலயத் திருப்பணிகளிலும் ஆர்வம் காட்டுவீர்கள். வைத்திருக்கும் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற ஆர்வம் இப்பொழுது கைகூடும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், சப்தமப் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். திடீர் மாற்றங்கள் உருவானாலும் அது நன்மை தரும் விதமாகவே அமையும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு வந்து சேரும். வீண் விவகாரங்களில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாகி, வேண்டிய சலுகைகளைப் பெறுவர்.
குருவின் பார்வை 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே வெற்றிகள் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் புனிதமடைகிறது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு பலன் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேலிடத்தில் இருந்து தானாகவே உங்களுக்கு உயர் பொறுப்புகள் தரப்படலாம். லாப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில், அதன் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினை அகலும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு இப்போது நல்ல தகவல் கிடைக்கும். கல்யாணம் போன்ற சுப காரியங்களுக்கு விரயங் களைச் செய்ய முன்வருவீர்கள். பயணங்கள் பலன்தரும் விதம் அமையும். குடி இருக்கும் வீட்டால் சில பிரச்சினைகள் உருவாகலாம். இடமாற்றங்களால் இனிமை காண்பீர்கள்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் கொஞ்சம் குடும்பச்சுமை கூடும். ‘வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். உடல்நலச் சீர்கேடுகளால் உள்ளத்தில் கவலை ஏற்படும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பத்தகாத விதத்தில் வரலாம். விரயங்கள் கூடுதலாக இருக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். பொதுவாழ்வில் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால்தான் ஆதாயங்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். இதன் விளைவாக உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உபத்திரவம் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்தை முன்னதாகச் சொல்வதன் மூலம் அதில் தடைகள் உருவாகிவிடும். எனவே எதையும் யோசித்துப் பேசுவது நல்லது. அண்ணன், தம்பிகளிடம் அனுசரித்துச் செல்லுங்கள். பொதுவாக கிரகங்களின் வக்ர காலங்களில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் ஆரோக்கியப் பாதிப்புகள் அதிகரிக்கும். வீண் விரயங்கள் உண்டு. உறவினர்களுக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகவே தெரியும். நடக்கும் தொழிலில் கூட்டாளிகள் விலகலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. வாகனங்களில் செல்லும்பொழுது கூடுதல் கவனம் தேவை. மனப்பயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் கொடுத்த பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் அது நிறைவேறாமல் போகலாம். எனவே மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்லி பணம் வாங்கி கொடுப்பதன் மூலம் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
செவ்வாய் - சனி பார்வைக் காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகர ராசியில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார். அதே சமயம் கும்பத்தில் சஞ்சரிக்கும் குரு செவ்வாயைப் பார்த்து புனிதப்படுத்துகின்றார். 4.6.2021 முதல் 21.7.2021 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் நீச்சம் பெற்ற செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியை சப்தமப் பார்வையாகப் பார்க்கின்றார். இதுபோன்ற காலங்களில் மிகவும் விழிப்புணர்ச்சி தேவை. என்னதான் நீங்கள் முறையாக செயல்பட்டாலும், எதிரிகள் உங்கள் செயல்பாடுகளில் குறை காண்பர். பணம் வாங்கல் - கொடுக்கல்களில் ஒரு சிலருக்கு ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடுதலாக இருக்கும். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. உத்தியோகப் பிரச்சினை தலைதூக்கும். மாற்றங்கள் திடீரென வந்து மனக்கலக்கத்தை உருவாக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்தப் புத்தாண்டில் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறை வேற திங்கட்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது. பவுர்ணமி அன்று முருகப்பெருமானை வழிபடுவதால் முன்னேற்றம் கூடும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு நீங்கள் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய ஆண்டாகும். உடன்பிறப்புகளையும், உறவினர்களையும் அனுசரித்துச் செல்லுங்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட வேண்டுமானால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தாயின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்களும் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வர். பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதிலும், மாலை கிடைப்பதிலும் இருந்த தடை அகலும். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றங்கள் வரலாம். கண்டகச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் சனிக்கிழமை சனி பகவான் வழிபாடு சஞ்சலங்களைத் தீர்க்கும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
கண்டகச் சனியின் ஆதிக்கம், கடமையில் கவனம் இனி தேவை! கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். இதைக் ‘கண்டகச் சனி’ என்று சொல்வது வழக்கம். இப்போது சனியின் நேரடிப்பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது.
‘கண்டகச் சனி’ என்றதும், ‘ஏதேனும் ‘கண்டம்’ வந்து விடுமோ’ என்று நினைக்க வேண்டாம். சனி மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கூடும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதற்கேற்ப சனியின் கடுமையைக் குறைக்கும். இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது.
ஏழாமிடத்தில் சனி
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக, உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 1, 4, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், முன்னேற்றம், உற்சாகம், சுகஜீவனம், வாகனம், தாய்வழி உறவு, பூர்வீகம், பாக்கியம் ஆகிய அனைத்து ஆதிபத்யங்களிலும் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். சனியின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் கல்வியில் கரையேற கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த இலக்கை அடைவது கடினம் என்றாலும், குரு பார்வை இருப்பதால் மகர குருவின் சஞ்சார காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தனவரவு தாராளமாக வந்து சேரும். தனாதிபதியாகவும், குடும்ப ஸ்தானாதிபதியாகவும் சூரியன் விளங்குவதால், மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்பு கிட்டும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதனாக சந்திரன் இருப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். மின்னணுத் துறையிலும், கலைத்துறையிலும் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வில் வெளிவரும் சூழ்நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வீடு, இடம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் ஆர்வம் கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். இந்த நேரத்தில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கப் போகின்றார். அப்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஏற்பட்டாலும், கும்ப ராசி சனிக்கு சொந்த வீடு என்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். சொந்தங்களின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு வருவதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மிகச்சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொழில் தொடங்க வாய்ப்புகள் கைகூடி வரும். 4-ல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி தொல்லைகள் உண்டு. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். வாகனங்கள் வாங்கிப் பயணம் செய்யும் முயற்சி கைகூடும். கேதுவின் ஆதிக்கத்தால் சகோதர வர்க்கத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். அவர்கள் மூலம் வாங்கிய தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
புதன்கிழமை தோறும் விரதமிருந்து ராமபிரான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராமர் பட்டாபிஷேக படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து ராமர், சீதா, அனுமன் ஆகியோருக்குரிய பாடல்களைப் பாடி வழிபடுவது நல்லது. ராமபிரான் வழிபாடு நம்பிக்கையை நிறைவேற்றி வைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி சனி என்பதால், குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் சிக்கலை உருவாக்கும். சனி அஷ்டமாதிபதியாகி வக்ரம் பெறுவதால் ஒருசில காரியங்கள் திடீரென முடிவாகும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம், பெற்றோர்களின் மணிவிழாக்கள் நடைபெற்றுச் சுபவிரயங்களை உருவாக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய பெயர்ச்சியாக அமையும். அதிக விரயங்கள் ஏற்படும். உறவினர் பகை ஏற்பட்டு உள்ளத்தில் தெளிவில்லாமல் செயல்பட வைக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்காமல் இருக்க, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. உடன்பிறப்புகளின் குணமறிந்து செயல்படுவதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு திடீர் இடமாற்றங்கள் வரலாம். வேலையில் பிரச்சினைகளும் உண்டு. நிதானத்துடன் செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
பதினொன்றில் வருகிறது ராகு..பணவரவு திருப்தி தரும்..
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், செப்டம்பர் 1-ந் தேதி அன்று லாப ஸ்தானம் எனப்படும் 11-ம் இடத்திற்குச் செல்கின்றார். அது போல கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதே நாளில் வரப்போகின்றார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். அப்பொழுது அவர் உங்கள் ராசி யையும் 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின் றார். அதன்பிறகு டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு சனி செல்கின்றார். அப்பொழுது கண்டகச் சனியின் ஆதிக்கம் நடைபெறும். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி குரு, கும்ப ராசிக்குச் செல்கின்றார். அப்பொழுது உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங் களைப் பார்வையிடுகின்றார். இவற்றை அடிப்படையாக வைத்து ராகு-கேது பலன்களைப் பார்ப்போம்.
வருமானத்தைப் பெருக்கும் ராகு
பிள்ளைகளால் பெருமை தரும் கேது
பதினோராமிடமான லாப ஸ்தானத்திற்கு வரும் ராகு, உங்களின் சோகத்தை மாற்றி சுகத்தைக் கொடுப்பார். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். நஷ்டத்தில் நடந்த தொழில் இனி லாபத்தில் நடக்கும். வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிக்கு வங்கிகளின் கடனுதவி கிடைக்கலாம். முன்னோர் வழிச்சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும், வேலையில் இருப்பவர்களுக்குச் சுயதொழில் செய்யும் வாய்ப்பும் உருவாகலாம்.
பஞ்சம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்து பற்றிய பிரச்சினை முடிவிற்கு வரும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்குவர். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதியும், கல்யாண முயற்சி கருதியும் நீங்கள் எடுத்த முடிவு பலன்தரும். ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கும், தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாத வேலை அமையும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, எண்ணங்கள் எளிதில் நிறைவேற வழிபிறக்கும். குடும்பத்தில் அமைதி நில வும். உத்தியோகம் மற்றும் தொழிலில் உன்னத நிலை காணும் சூழ்நிலை உருவாகும். பூமிப் பிரச்சினை அகலும். புதிய சொத்துக்கள் வாங்குவது, வாங்கிய சொத்தை விற்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடிய வழிபிறக்கும். அரசு வழி உத்தியோகத்திற்கு ஏற்பாடு செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். சாதாரண வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வோடு கூடிய வேலை அமையலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், உயர்பதவிகளும் கிடைக்கும்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
உங்கள் ராசிநாதன் சந்திரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். அதே நேரம் பணப்புழக்கத்திற்கு குறைவு ஏற்படாது. வேகமாகத் தொடங்கிய வேலையைப் பாதியிலேயே விட்டுவிடுவீர்கள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் இப்பொழுது உங்களுக்கு அதிகம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதப்படலாம். அதிகார வர்க்கத்தினரின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியச் சீர்கேடுகள் ஏற்படலாம், கவனம் தேவை.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, நற்பலன்கள் ஏராளமாக நடைபெறும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்பு உண்டு. உங்களால் பலன்அடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். ஆபரணங்கள் வாங்க சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பாராத நல்ல தகவலும் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
பாத சார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, அங்குள்ள கிரகங்களின் பாதசார அடிப்படையில் பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். அவற் றின் பலாபலன்களை பாதசார அடிப்படையில் நாம் அறிந்து செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது வரவும், செலவும் சமமாகவே இருக்கும். புதன், உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். சகோதர, சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். எனவே அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது இக்காலத்தில் உடன்பிறப்புகளால் ஒருசில நன்மை கிடைக்கும். அவர்களின் இல்லத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் சீராகும். இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள். வெளிநாட்டு முயற்சியில் எதிர்பார்த்த பலன் உண்டு. வாங்கிய கடனில் ஒரு பகுதியைக் கொடுத்து மகிழ்வீர்கள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 7,8 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவருடைய சாரத்தில் கேது வரும்பொழுது இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் எளிதில் வரலாம். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் கூட ஏற்படலாம். எந்த மாற்றங்கள்வந்தாலும் வந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் நிர்ப்பந்தம் ஏற்படும். மூன்றாம் நபரின் தலையீட்டால் குடும்பப் பிரச்சினைகள் கொடிகட்டிப் பறக்கும். இக்காலத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கூட குடும்ப விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. துன்பங்களை விலைகொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும். கடின உழைப்பும், கவலையும் அதிகரிக்கும் நேரமிது.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குருபகவான், உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே இக்காலத்தில் ஓரளவு நற்பலன்களே நடைபெறும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்பட்டு தனித்து இயங்கும் சூழல் உண்டு. உத்தியோகத்தில் கூட விருப்ப ஓய்வில் வெளிவந்து நண்பர்களைக் கூட்டாக்கி தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். எது, எப்படி இருந்தாலும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகியது என்று சொல்வீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
லாப ஸ்தான ராகுவால் வருமானம் திருப்தியாக அமையவும், பஞ்சம ஸ்தான கேதுவால் பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் கிடைக்கவும், இல்லத்து பூஜையறையில் சனிக்கிழமை தோறும், சனி கவசம் பாடி வழிபடுவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது ஜெய ஆஞ்சநேயரை வழிபடலாம்.
பெண்களுக்கு...
ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வாழ்க்கை அமையும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்புகள் கைகூடி வரும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். கடன் சுமை குறையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். நேர்மறைச் சிந்தனைகளை மேற்கொள்வது நல்லது. செவ்வாய் விரதமும், அம்பிகை வழிபாடும் நன்மை தரும்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
ஏழாமிடத்தில் குரு பகவான், இல்லற வாழ்க்கை இனி அமையும்!
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 7-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கு ஓராண்டு காலம் வீற்றிருந்து பார்வை பலனால், உங்கள் விருப்பங்கள் நிறைவேற உறுதுணையாக இருப்பார். இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு, நீச்சம் பெற்றாலும் கூட நேரடியாக அவர் பார்வை உங்கள் ராசியின் மீது பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். எதை எப்படிச் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அப்படியே செய்து முடிப்பீர்கள். இடையில் சில மாதத்திற்கு எட்டாமிடத்திற்கும் குரு செல்கின்றார். குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு, நினைத்ததெல்லாம் நிறைவேறும். அஷ்டம குருவின் ஆதிக்க காலத்தில் தடைகளும், தாமதங்களும் வருமேயானால் வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குருவை வழிபடுவதன் மூலம் நன்மைகளைப் பெறமுடியும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கின்றார். பிறகு 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கப்போகின்றார். உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உறவினர்களின் ஒத்துழைப்பும் திருப்திகரமாக இருக்கும். வீடு தேடி வந்த வீண் பிரச்சினைகள் அகலும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரமிது. திடீரென அறிமுகமாகும் ஒருவரால் உங்களுக்கு நற்பலன்கள் வந்து சேரப்போகின்றது.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல வாய்ப்புகள் கைகூடிவரும். குரு பார்வையால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. உத்தியோகம் தொடர்பான நேர்முகத் தேர்வில் இப்பொழுது வெற்றி கிடைக்கும். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு அரசியல் களத்தில் குதிப்பீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் திடீரென வரலாம்.
ஒருசிலருக்கு உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் கடன்சுமை குறைய உதவிபுரிவர். குருவின் பார்வை 11-ம் இடம் எனப்படும் லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து கூட அழைப்புகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்துவருவர். பணியாளர்களின் தொல்லை அகலும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழில் இனி சொந்தக் கட்டிடத்திற்கு மாறும் அமைப்பு கைகூடும். தெளிந்த மனதுடன் செயல்படுவீர்கள். கவுரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். மூத்த சகோதரத்துடன் இருந்த மோதல்கள் விலகும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதி சூரியன் ஆவார். எனவே தனாதிபதி சூரியன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது தனவரவு திருப்திகரமாக இருக்கும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். இதுவரை சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை இனிக் குறையும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ சுப காரியம் நடைபெறுவதில் தடை இருந்தால், அந்தத் தடைகள் இனி தானாக விலகும். பிரபலங்களின் நட்பால் பெருமை காண்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன் உங்கள் ராசிநாதன் ஆவார். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘குருசந்திர யோக’ அடிப்படையில் மிகுந்த நன்மைகளைச் செய்வார். குறிப்பாக தொழில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். பெற்றோர்களும், உற்றார், உறவினர்களும் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். வியாபாரம் வெற்றிநடை போடும். வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை தடையாக இருந்த பயணம் தானாக நடைபெறும். ‘நூதன வாகனங்கள் வாங்கிப் பயணிக்க வேண்டும்’ என்று விரும்புபவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. விவசாயம், பண்ணை வீடுகள் அமைக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்வோர் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் ஈட்டுவர்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான் சஞ்சாரம் மிகச்சிறப்பாக இருக்கின்றது. செவ்வாய் உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமாகும். பாக்கிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் சாரத்தில் குரு பகவான் உலாவரும் பொழுது, நீங்கள் நினைக்க இயலாத யோகம் வந்துசேரப்போகின்றது. வியாபாரம் சூடுபிடிக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் தானாகவே வந்து சேரலாம். ஒருசிலருக்கு தலைமைப் பொறுப்புகளும் எதிர்பாராத வகையில் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவர். நீங்கள் கேட்ட சலுகைகளையும் உடனுக்குடன் வழங்குவர். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதியும், எதிர்கால நலன்கருதியும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கைவிட்டுப்போன சொத்துக்களை மீண்டும் கைப்பற்றுவீர்கள். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொழிலில் இருந்த குறுக்கீடு சக்திகள் அகலும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் குரு, கும்ப ராசியில் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. ஆயினும் அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைத்திருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். வீண் விரயங்கள் உண்டு. எதிர்ப்புகளும் வீடு தேடி வரும். இல்லத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கலாம். இருப்பினும் குரு பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு செல்லும் முயற்சியை தள்ளி வைப்பது நல்லது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும். குடும்பச்சுமை அதிகரிக்கும். வாங்கிய கடனைக் கொடுக்க ஏதேனும் சொத்துக்களை விற்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் வரலாம். வரும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்திலேயே அமையும். மறைமுகப் பகை அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள், பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படும் சூழ்நிலை கூட உண்டு. எனவே கூட்டாளிகளை அனுசரித்துக் கொள்வதோடு மேலிடத்தில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் குரு தட்சிணாமூர்த்தியின் படம் வைத்து குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது. மேலும் சதுர்த்தியன்று விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சகல யோகங்களும் வந்து சேரும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு, குரு பார்வை இருப்பதால் முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். உடல்நலம் சீராகும். உன்னத வாழ்விற்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுக்கும். புகுந்த வீட்டிற்குப் பெருமை சேர்ப்பீர்கள். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவு திருப்திகரமாக இருக்கும். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவர்களது திறமையைப் பார்த்து ஊதிய உயர்வு கொடுக்க மேலதிகாரிகள் முன்வருவர். வீடு கட்ட எடுத்த முயற்சிக்கும் உதவிகள் கிடைக்கும். பவுர்ணமி வழிபாடு பலன்தரும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/17/2021 11:33:42 PM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Cancer