நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வியாபார முன்னேற்றம் ஏற்படும். வாகன யோகம் உண்டு. அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டு.
22.01.2021 முதல் 28.01.2021 வரை
முன்னேற்றமான வாழ்வுக்குத் தேவையான செயல்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தள்ளிவைத்த வேலையை உடனே செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். தொழில் லாபகரமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் பணியை செய்து கொடுக்க முடியாமல் போகலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
மகர ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி பகவான் உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். அவரோடு சந்திரன், சூரியன், குரு, புதன் ஆகிய கிரகங்களும் கூடி, கூட்டுக் கிரக யோகத்தை உருவாக்குகின்றன. எனவே, ஒருவரால் நன்மை கிடைக்காவிட்டாலும், மற்றொருவரால் நன்மை கிடைக்கும். குரு உங்கள் ராசியிலேயே நீச்ச பங்கம் அடைந்து, பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், பொருளாதார நிலை உயரும். என்றாலும், ஏழரைச் சனியில் ஜென்ம சனியின் ஆதிக்கம் நடப்பதால், விரயங்களும் அதிகரிக்கும்.
பஞ்சம ஸ்தானத்தில் ராகு
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள ரிஷப ராகு நன்மை தரும் என்றாலும், அது உங்களுக்கு புத்திர ஸ்தானம் என்பதால், பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சொத்து விற்பனையில் இருந்த தடை அகலும். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மிகத்திற்கு ஒரு தொகையை செலவிடுவீர்கள். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.
ஜென்ம ராசியில் கூட்டுக் கிரகங்கள்
இம்மாத தொடக்க நாளில் சந்திரன், சூரியன், குரு, புதன் ஆகிய கிரகங்கள், உங்கள் ராசிநாதன் சனியோடு இணைந்து உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார்கள். அஷ்டமாதிபதி சூரியன், உங்கள் ராசியில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. வரவைக் காட்டிலும் செலவு கூடும். ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். எதையும் யோசித்து செய்யுங்கள். சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள். ஏழரைச் சனி நடப்பதால், நிதானத்தோடு செயல்படுங்கள். வழிபாடு புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி மகர ராசியில் வக்ரம் பெறும் புதன், பிப்ரவரி 10-ந் தேதி நிவர்த்தியாகிறார். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால், உத்தியோகத்தில் சில மாற்றங்கள் உருவாகும். சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். 9-க்கு அதிபதி யாகவும் புதன் விளங்குவதால், தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் தாமதம் உருவாகும்.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்று, சனியோடு இணைந்து ‘நீச்ச பங்க ராஜயோகம்’ பெறுகிறார். ஜனவரி 22-ந் தேதி மேலும் வலிமை இழக்கிறார். எனவே, சகோதர ஒற்றுமை குறையும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். 12-க்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால், பயணங்களிலும் கவனம் தேவை.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இக்காலம் உங்களுக்கு இனிமையாக அமையும். வாரிசுகளால் நன்மை கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்க்கும் யோகம் உண்டு. வருமானம் திருப்தி தரும்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுங்கள்.
பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 17, 18, 21, 22, பிப்ரவரி: 1, 2, 5, 6, 7.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் முதல் பாதியைக் காட்டிலும், பிற்பாதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுக்கிரக யோகம் உள்ளதால், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். கணவன்-மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகும். பெற்றோர்களால் அனுகூலம், உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு கூடும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது
(உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)
மகர ராசி நேயர்களே! ஏழரைச்சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கத்தோடு இந்தப் புத்தாண்டு பிறக்கின்றது. ஒரு வழியில் பார்த்தால் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே பலம் பெற்று இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்ல, அவரோடு சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான வியாழனும் இணைந்திருக்கின்றார். இந்தப் புத்தாண்டில் மறக்கமுடியாத சம்பவங்கள் நிறைய நடைபெறப்போகின்றது. உங்களுக்கு முதல் சுற்றாகவோ, மூன்றாவது சுற்றாகவோ, ஏழரைச் சனி நடைபெற்றால் அதில் கவனம் தேவை. இரண்டாவது சுற்றாக விளங்கும் பொங்கு சனி காலமாக இருந்தால் தொழில் முன்னேற்றம், உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு, கடன் சுமை குறையும் வாய்ப்பு ஏற்படும்.
ஆண்டு தொடங்கும் பொழுதே குருச்சந்திர யோகமும், நீச்ச பங்க ராஜயோகமும் ஏற்படுகின்றது. மேலும் குரு நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப இல்லத்தில் சலசலப்பான நிலை மாறி, கலகலப்பான நிலை உருவாகும். சுபச்செய்திகள் வந்து சேரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து மேம்பாடு அடைய வைப்பர். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம்.
புத்தாண்டின் தொடக்க நிலை
இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். அவரோடு குரு பகவானும் சஞ்சரிக்கின்றார். எனவே ஜென்ம குரு, ஜென்மச்சனி என்றும் எல்லோரும் சொல்வார்கள். இன்னும் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்க காலம் இருக்கின்றது. உங்களைப் பொறுத்தவரை சனி பகவான் நன்மை செய்யும் கிரகமாகவே விளங்குபவர். இருப்பினும் ‘ஆயுள்காரகன்’ என்றும் அவர் அழைக்கப்படுவதால், சிறுசிறு அச்சுறுத்தல்களை ஆரம்பத்தில் கொடுப்பார். குரு போன்ற சுபகிரகங்களின் பார்வை பதியும் பொழுது, உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.
அஷ்டமாதிபதி சூரியன் 12-ல் மறைந்திருப்பது யோகம்தான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களும், திருப்தி தரும் விதத்தில் ஊதியமும் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வாகன மாற்றங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சுக்ரன், கேதுவோடு இணைந்திருக்கிறார். எனவே, வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்து சேரும். செவ்வாய் பலம் நான்கில் இருப்பதால், இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பொதுவாக ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க இடம் வாங்குவது, வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். சர்ப்பக் கிரகங்களுக்கு மத்தியில் உங்களுக்கு ராசி இருப்பதால் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே குரு பகவான் சஞ்சரித்து நீச்சம் பெறுகின்றார். அவர் 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். அவர் வலிமை இழக்கும் பொழுது மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து கொண்டே இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். வழக்குகள் எதிர்பாராத விதத்தில் வரலாம். உடன்பிறப்புகள் சொத்து சம்பந்தமான வழக்குகள் போட்டாலும் அது இழுபறி நிலையில்தான் இருக்கும். எதையும் யோசித்துச் செயல்படுங்கள்.
12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் பயணங்கள் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். விரயங்களைச் சமாளிக்கும் திறமை உங்களுக்கு உண்டு என்றாலும், வீண் விரயங்களால் மனக்கலக்கமும் உருவாகும். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். கொடுக்கல் - வாங்கல்களில் பாக்கிகள் வசூலாகாமல் போகலாம். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வருவதில் தாமதம் ஏற்படும். சொத்து விற்பனை முடிவடைந்தாலும் பணம் கைக்கு கிடைப்பது அரிது. பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு கொடுத்த பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்தால், அது முடிவடையாமல் இருப்பது மட்டுமல்ல, உங்கள் மீது வீண் பழிகளும் வந்துவிடும். வாகனப் பழுதுகளால் வாட்டங்களும் அதனால் விரயங்களும் உண்டு.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே, அந்த இடங்கள் புனிதமடைந்து உங்களுக்கு நன்மை தரும் விதத்தில் பலன்கள் கிடைக்கும். குறிப்பாக உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தெய்வ பலமும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். இதுவரை விலகி இருந்த தந்தை வழி உறவினர்கள், உங்களோடு வந்திணைய வாய்ப்பு உண்டு. வீடு வாங்க வேண்டும், இடம் வாங்க வேண்டுமென்று எண்ணியிருந்தால், அந்த எண்ணங்கள் இந்த ஆண்டு நிறைவேறும். ஏழரைச் சனி நடைபெறுவதால் வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு தாமதங்கள் ஏற்படும்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில், அதன் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் அன்பிற்கு பாத்திரமாவர். கேட்ட சலுகைகள் எளிதில் கிடைக்கும். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். எதிரிகள் விலகுவர். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக்கொள்வீர்கள். இழப்புகளை ஈடுகட்ட புது வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் வந்து சேரும். சங்கிலித் தொடராக வந்த கடன்சுமை இனி பாதிக்கு மேலாகக் குறையும். பெற்றோர்களின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. அவர்களின் மணிவிழா, பிறந்தநாள் விழா, திருமண நாள் போன்றவற்றை சீரோடும், சிறப்போடும் கொண்டாடி சுபவிரயங்களைக் காண்பது நல்லது. இல்லையேல் வீண் விரயங்களும், விமர்சனங்களால் பாதிப்புகளும் ஏற்படும். வீடு மாற்றங்கள் இக்காலத்தில் ஒருசிலருக்கு வரலாம். வீண் விரோதங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும். சகாய ஸ்தானாதிபதி தன ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் கட்டுக்கடங்காத விரயங்கள் ஏற்படலாம். கடமையை சரிவரச் செய்ய இயலாது. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். மனக்கலக்கத்திற்கு மத்தியில் உங்கள் வாழ்க்கை அமையலாம். ‘பணப்புழக்கம் அதிகரிக்க என்ன செய்யலாம்?’ என்று யோசிப்பீர்கள். அதே நேரம் தொழிலிலும் கவனம் செலுத்த இயலாது. உத்தியோகத்திலும் கவனம் செலுத்த இயலாது.
14.9.2021 முதல் 13.10.2021 வரை மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கும் அதிபதியானவர் குரு. எனவே அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப இக்காலத்தில் ஒருசில நல்ல பலன்களும் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் தகவல்கள் வரலாம். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். உடன்பிறந்தவர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமணம் போன்ற சுபகாரியங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் குறையும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. நீண்டதூரப் பயணங்களால் விரயம் உண்டு. சேமிப்புகள் கரையலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள். கடுமையாக முயற்சித்த காரியங்கள் கூட முடிவடையாமல் போகலாம். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. பிள்ளைகளாலும், பிறராலும் தொல்லை அதிகரிக்கும். உத்தியோக மாற்றங்கள் உடனுக்குடன் வந்து கொண்டேயிருக்கும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரை செவ்வாய்-சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும். இடர்பாடுகள் அதிகரிக்கும். வழக்குகள் வந்து அலைமோதும். இடமாற்றங்கள் இனிமை தராது. உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.
நீங்கள் அவசரப்பட்டு பேசும் சொற்கள் உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும். புதியவர்களை நம்பி செயல்பட வேண்டாம். பூமி யோகம் ஏற்பட்டாலும் பத்திரப்பதிவில் தடைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடும். சகோதர வர்க்கத்தினர்களின் சச்சரவுகளை எதிர் கொள்ளும் சூழ்நிலை உண்டு.
வளர்ச்சி தரும் வழிபாடு
சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது. ஏகாதசி விரதமிருந்து திருமால்-திருமகள் வழிபாட்டை மேற்கொண்டால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் குடும்பச்சுமை கூடும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்களின் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். தாய் மற்றும் உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பிரயாசை எடுப்பீர்கள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் விருப்பம் போல் வந்து சேரும். பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காணும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஜென்ம ராசியில் சனி! சிந்தித்து செயல்பட வேண்டும் இனி! மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு வருகின்றார். ஏழரைச்சனியில் விரயச்சனி முடிந்து ஜென்மச்சனி தொடங்கிவிட்டது. மகரம், சனிக்குச் சொந்த வீடு என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ‘ஆயுள்காரகன்’ என்று சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினர் களுக்கோ உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகளை கொடுத்து நிவர்த்திசெய்வார். திடீர் திடீரென முடிவுகளை மாற்றிக்கொள்வீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை அதி கரிக்கலாம்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருப்பதால் அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. மேலும் விரயாதிபதி குரு நீச்சம் பெறுவதும் யோகம்தான். எனவே விரயங்களைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு ஏற்படும். வீடு மாற்றங்கள், இடமாற்றங் கள், உத்தியோக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
ஜென்மச்சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே சனி சஞ்சரிக்கப் போகின்றார். இந்த ஜென்மச்சனி காலத்தில், திடீர், திடீரென மாற்றங்களும், மனக்குழப்பங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களோடு இணைந்து செயல்பட்டால் உள்ளம் மகிழும் சம்பவங்களை நிறைய சந்திக்கலாம். இல்லையேல் அல்லல்பட்டு அதற்கு பரிகாரங்களை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் செயல்களில் குறை கண்டுபிடிப்பர். பணியில் தொய்வு ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பகை உருவாகலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 3, 7, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. ராசிநாதன் மட்டுமல்லாமல் தனாதிபதியாகவும் சனி விளங்குவதால் அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து அதற்குரிய காரகத்துவத்தைச் சிறப்பாகச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சகோதரம், வெற்றி, பஞ்சாயத்துக்கள், களத்திரம், குடும்பம், வெளிநாட்டு முயற்சி, தொழில் வளம், பெற்றோர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் எல்லாம் மாற்றங்கள் வரலாம். 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகளில் எதிர்பாராத மாற்றம் உண்டு.
சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால், கல்யாண முயற்சிகளில் ஒருசில தடைகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் சிறப்பாக முடிந்துவிடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி வணிகம் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள், கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால், பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்கக்கூடாது. சகப் பணியாளர்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். தொழில் நடத்து பவர்களுக்கு போதிய மூலதனம் இல்லாமல் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க விரும்புவர்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனம் தேவைப்படும். வம்பு வழக்குகள் வாசல் தேடி வரும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்காது. அஷ்டமாதிபதியாக சூரியன் விளங்குவதால் எதையும் துணிந்து செய்ய இயலாது. தொடர்கதையாய் கடன்சுமை அதிகரிக்கும். அரசாங்க விரோதங்களும் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரெனப் பொறுப்புகள் மாற்றப்படலாம். செய்தொழிலில் கவனம் செலுத்தா விட்டால் ஒவ்வொரு நாளும் இழப்புகளையே சந்திக்க நேரிடும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண முயற்சிகள் கை கூடும். களத்திர ஸ்தானாதிபதியாகச் சந்திர பகவான் விளங்குவதால் குடும்பத்தில் பிரிந்தவர்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கைகூடி வரும். வாகனம் வாங்க நினைப் பவர்களுக்கு இக்காலம் உகந்த காலமாகும். வாகனத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு விலை உயர்ந்த நவநாகரிக வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். செல்வநிலை உயரும். ‘சேமிப்புக் கரைகிறதே’ என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சி அடைவர். இடம், பூமியால் லாபம் உண்டு. என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து, அதன் விற்பனை மூலம் வரும் தொகையைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்த வர்களுக்கு அனுகூலமான நேரம் இது. இக்காலத்தில் கும்பத்தில் சனியும் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப்போகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தன ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகார பலம் பெற்றவர்களின் ஆதரவோடு நல்ல சந்தர்ப்பங்கள் தேடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோக உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அர்த்தாஷ்டம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக் கலாம்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அர்த்தாஷ்டம ராகுவாக வருவதால் ஆரோக்கியத் தொல்லைகள் உண்டு. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. 10-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகோதர சச்சரவுகள் அகலும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். கேது பலத்தால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வதோடு இல்லத்து பூஜை அறையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் படம் வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகிறார்.
இக்காலத்தில் கூடுதல் கவனம் உங்களுக்குத் தேவை. எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்களைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். உறவினர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகவே தெரியும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சச்சரவு ஏற்படும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி விரயச்சனியின் ஆதிக்கம் முடிந்து ஜென்மச் சனியின் ஆதிக்கமாக நடைபெறுகின்றது. ஆரோக்கியப் பாதிப்பு ஏற்படும். வீடு மாற்றங்கள் அல்லது ஊர் மாற்றங்கள் ஏற்படலாம். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்துச்செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். தாய் மற்றும் உடன்பிறப்புகளையும் அரவணைத்துச் செல்வதே நல்லது. சுபவிரயங்களை அதிகரித்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. வழிபாட்டின் மூலமே வளர்ச்சியில் உள்ள தளர்ச்சி அகலும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
ஐந்தில் ராகு வருகிறது..ஆதரவுக் கரம் தருகிறது..
மகர ராசி நேயர்களே!
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு, செப்டம்பர் 1-ந் தேதி பாக்கிய ஸ்தானம் எனப்படும் 5-ம் இடத்திற்கு வரப்போகின்றார். அதே போல உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் அதே நாளில் லாப ஸ்தானத்திற்கு வரப்போகின்றார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி, உங்கள் ராசி யான மகர ராசிக்கே குரு பகவான் செல்கின்றார். அதன்பிறகு செப்டம்பர் 26-ந் தேதி உங்கள் ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகி வருகின்றார். ஏழரைச்சனியில் இப்பொழுது ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறப்போகின்றது. 2021-ம் வருடம் நவம்பர் மாதம் 13-ந் தேதி குரு, கும்ப ராசிக்குச் செல்கின்றார். அப்போது அவர் உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்வையிடுகின்றார்.
இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டும் உங்கள் சுய ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் பலமறிந்தும் செயல்படுவதன் மூலம் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கலாம். கிரகங்களின் சஞ்சாரம் பலம் இழந்திருக்கும் பொழுது பரிகாரங்களும், வழிபாடுகளும் ஓரளவு கைகொடுக்கும்.
சொத்துக்களால் லாபம் தரும் ராகு
சொந்தங்களால் பலன் தரும் கேது
ராகு பகவான் இப்பொழுது சஞ்சரிக்கும் இடம் 5-ம் இடமாகும். இந்த இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் மட்டுமல்ல, பிள்ளைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வைக்கும் இடமாகும். எனவே அங்கு ராகு வரும்பொழுது பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். ‘கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல பொருத்தமான வேலை அமையும். முன்னோர் செய்த திருப்பணிகளை விடாது செய்ய முன்வருவீர்கள்.
பதினோறாம் இடத்திற்கு வரும் கேதுவால் லாப ஸ்தானம் பலமடைகின்றது. எனவே தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். மூத்த சகோதரர்களால் முன்னேற்றம் உண்டு. மூதாதையர் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பழுதடைந்த வீட்டைப் பராமரிக்கும் பணி துரிதமாக நடைபெறும். தொழிலில் வரும் லாபத்தைக் கொண்டு அறப்பணிகள் செய்ய முன்வருவீர்கள். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கலாம்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தாமதங்கள் அகலும். ஆரோக்கியம் சீராகி அன்றாடப் பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். தாயின் உடல்நலம் தேறும். சகோதரர்கள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அது கைகூடும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
சந்திரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உறவினர்கள் பகை மறந்து பாசத்தோடு பழகுவர். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வழக்குகள் சாதகமாக முடியும். தொழிலை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன்மூலம் வருமானம் வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த மனக்கசப்புகள் மாறும். கடல் தாண்டி வசிக்கும் உறவினர்கள் நீங்கள் கேட்ட உதவியைச் செய்து கொடுக்க முன்வருவர்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும்பொழுது, மிகுந்த கவனம் தேவை. விரயங்கள் அதிகரிக்கும். ‘நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே’ என்று கவலைப்படுவீர்கள். அஷ்டமாதிபதியாகச் சூரியன் விளங்குவதால் கூட்டாளிகளால் ஏமாற்றங்கள் ஏற்படலாம். குடும்பச் சுமை கூடும். மற்றவர்களின் ஒத்துழைப்பு குறைவாகக் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் சூழ்நிலை சிலருக்கு உருவாகும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் முதலில் புதன் சாரத்திலும், பிறகு சனி சாரத்திலும், அதன்பின்பு குரு சாரத்திலும் சஞ்சரிக்கப் போகின்றார். ‘நிழல் கிரகம்’ என்று வர்ணிக்கப்படும் கேது பகவான், இந்த காலகட்டத்தில் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வாரா என்று பார்ப்போம். பாதசார அடிப்படையில் பார்க்கும் பொழுது, பகை கிரகத்தின் சாரமாகவே இருக்குமேயானால் அதற்குரிய பரிகாரங் களையும், வழிபாடுகளையும் செய்துகொண்டால் ஓரளவேனும் நற்பலன்களைப் பெற முடியும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது வரவும், செலவும் சமமாகவே இருக்கும். வருங்கால நலன் கருதி புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முன்கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளையும் இழக்க நேரிடலாம். பழைய கடனில் ஒரு பகுதியைக்கொடுக்கும் வாய்ப்பு உருவாகும். தந்தை வழி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். அவர்களால் தொழிலுக்கான மூலதனம் அல்லது ஒத்துழைப்பு கிடைக்கலாம். கூட்டாளிகளோடு இருந்த மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே அவரது சாரத்தில் கேது வரும்பொழுது எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் வந்து சேரும். பணவரவு ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றாலும், அதில் திருப்தி இருக்காது. அதிகாரிகளின் ஆதரவோடு ஒரு சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு பகவான், உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே அவர் சாரத்தில் கேது வரும்பொழுது, விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. சகோதர ஒற்றுமை குறையும். ‘தற்காலிகப் பணி நிரந்தரமாகவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். சேமிப்புகள் கொஞ்சம் கரையலாம். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வீண்பழிகள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. வீடுமாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வரலாம். இக்காலத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களுக்குத் தேவை.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஐந்தாமிடத்திற்கு வரும் ராகுவால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையவும், 11-ம் இடத்து கேதுவால் பணவரவு திருப்தி தரவும் விஸ்வரூப ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. இல்லத்து பூஜையறையில் லலிதா நவரத்தின மாலை பதிகம் பாடி தினமும் வழிபடுவது குடும்ப முன்னேற்றத்திற்கு நல்லது.
பெண்களுக்கு...
ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சொத்துக்களை உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கற்பக விநாயகர் வழிபாடு கவலைகளைப் போக்கும். பஞ்சமி திதியன்று வராஹியை வழிபடுவது நல்லது.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
ஜென்ம ராசியில் குரு பகவான், சிந்தித்து செயல்பட்டால் வெற்றியுண்டு!
மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகின்றார். அதிலும் நீச்சம் அடைகின்றார். சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளாலும் விரயம், உடனிருப்பவர்களாலும் விரயம், உடல்நிலைத் தொல்லையாலும் விரயம் என்ற நிலை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள், இலாகா மாற்றங்கள் போன்றவை திடீரென வந்து சேரலாம். ‘ஜென்ம ராமர் வனத்திலே’ என்பது ஒரு பழைய பாடல். ஆனால் அதை எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் சுய ஜாகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருக்குமேயானால் நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும். சில மாதங்கள் குரு பகவான் 2-ம் இடத்திற்கும் சென்று சஞ்சரிக்கின்றார். சில நாட்கள் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். அதற்கேற்ப உங்களுக்குப் பலன்கள் அமையும். முன்னேற்றப் பாதையில் ஏதேனும் குறுக்கீடுகள் வருமேயானால், வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வழிபடுவதன் மூலம் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் புனிதமடைகின்றது. மேலும் புத்திர ஸ்தானமாகவும், 5-ம் இடம் கருதப்படுவதால் தெய்வபலம் உங்களை வழிநடத்திச் செல்லும். திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மைகளும் கிடைக்கும். முன்னோர்கள் கட்டி வைத்த கோவில் திருப்பணிகளை தொடர்ந்து செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் நனவாகப் போகின்றது. அவர்களின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் வெற்றி தரும்.
குருவின் பார்வை ஏழாமிடத்தில் பதிவதால் அந்த இடம் புனிதமடைகின்றது. வாழ்க்கைத் துணையைப் பற்றி அறிந்து கொள்ளும் இடத்தைக் குரு பார்ப்பதால் திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை மாறும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். வெளிநாடு முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். மூத்த சகோதரத்தால் முன்னேற்றங்கள் அதிகரிக்கும்.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும். பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோர்கள் உங்கள் தொழிலுக்குத் தேவையான உதவியை செய்து கொடுக்க முன்வருவர். ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் அலைச்சலைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வது நல்லது. ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும் வாய்ப்பு உண்டு.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாக விளங்குபவர் சூரியன். எனவே அவரது சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையும். தேவையில்லாத வீண் வாக்குவாதங்கள் வந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத வகையில் பணவரவுகள் வந்தாலும், திடீர் விரயங்களால் சேமிக்க இயலாது. அடிக்கடி ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கையை உயரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தடைகள் வரலாம்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திற்கு அதிபதியானவர், சந்திரன். சப்தமாதிபதியான சந்திரன் சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரத் தட்டுப்பாடுகள் அகலும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் கல்யாணம் கைகூடும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. மனதுகாரகன் சந்திரன் என்பதால் எதையும் நீங்கள் நேர்மறையாகச் சிந்திப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். சலுகைகளும், சம்பள உயர்வும் தர முன்வருவர்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். சுக ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாயின் சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். ‘இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்கவேண்டும்’ என்று நினைத்தவர்களுக்கு, அந்த வாய்ப்புக் கைகூடும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நேரமிது. போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ‘வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும்’ என்று காத்திருப்பவர்களுக்கு இப்பொழுது அழைப்புகளும் வரலாம். சுயஜாதகம் பலம்பெற்றிருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ‘உறவினர்களிடம் கொடுத்த கடன் வசூலாகவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது தானாகவே வசூலாகும். மூத்த சகோதரர்கள் மட்டுமல்லாமல் முன்னேற்றப் பாதைக்கு மற்ற சகோதரர்களும் வழிகாட்டுவர்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. அப்பொழுது அந்த மூன்று ஸ்தானங்களும் புனிதமடைகின்றது. சகாய ஸ்தானாதிபதியான குரு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனக்கலக்கம் அகலும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றம் கிடைக்கும். அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். ஆதாயம் தரும் தகவல்கள் உங்களைத் தேடிவரும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலை விரிவுசெய்ய எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் மூலதனம் போட முன்வருவர்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக ஒரு தொகையைச் செலவிட நேரிடும். இடமாற்றம், வீடு மாற்றங்கள் எதிர்பாராமல் வரலாம். ‘பக்கபலமாக இருப்பவர்களை நம்பி எதையும் செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். சேமிப்பு கரையாமல் இருக்க எந்த நேரமும் விழிப்புணர்ச்சி தேவைப்படும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசனை செய்து செய்யுங்கள். மேலும் இறைவழிபாடு உங்களை நல்ல பாதையில் வழிநடத்தும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்துப் பூஜை அறையில் சனிக்கிழமை தோறும் அனுமன் கவசம்பாடி வழிபடுவது நல்லது. மேலும் வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபட்டால் துன்பங்கள் அகலும், எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி விரயங்களை அதிகரிக்கச் செய்யும். வீடு மாற்றங்களாலும், உத்தியோக மாற்றங்களாலும் மன அமைதி குறையும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். உடன்பிறப்புகளுக்கு கொடுத்து உதவும் சூழ்நிலை உருவாகும். வெளியூரில் இருந்து படிக்கும் பிள்ளைகளாகவோ அல்லது வேலை பார்க்கும் பிள்ளைகளாகவோ இருந்தால், அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்கள் நிலைமையை அறிந்துகொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். திடீர் மாற்றங்கள் வந்து சேரும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/27/2021 10:21:29 PM
http://www.dailythanthi.com/astrology/astrobenefits/capricorn