விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். ஆதாயத்தைவிட விரயங்களே அதிகரிக்கும். எண்ணங்களை நிறைவேற்ற இல்லத்தினரின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
22.01.2021 முதல் 28.01.2021 வரை
பணப் பற்றாக்குறையால் மனக்கலக்கம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு வெளியூரில் பணியாற்றும் வாய்ப்பு வந்து சேரும். அலுவலகப் பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். தொழில் செய்பவர்கள் சுறு சுறுப்பாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கலாம். இந்த வாரம் துர்க்காதேவிக்கு வெள்ளிக்கிழமை தீபமிட்டு வழிபடுங்கள்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
மிதுன ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் மறைந்திருக்கின்றார். அதே இடத்தில் சூரியன், சந்திரன், குரு, சனி ஆகிய கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. எனவே கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். மனக்குழப்பம் அதிகரிக்கும். விரயங்கள் இருமடங்காகும். சேமிப்பு கரையும். உடல்நலத்திலும் மிக மிக கவனம் தேவை.
ராகுவின் சஞ்சாரம்
சர்ப்பக் கிரகமான ராகு, விரய ஸ்தானமான 12-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். எதைச் செய்தாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். பயணங்கள் அதிகரிக்கும். அதற்கான பலன் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். 6-ம் இடத்தில் கேது இருப்பதால், உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. ஒரு கடன் தீர்ந்தாலும், புதிய கடன் வாங்கும் நிலை உருவாகும்.
அஷ்டமத்தில் கூட்டுக் கிரகம்
உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில், மாதத் தொடக்க நாளில் சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களும் கூடியிருக்கின்றன. இந்தக் கிரகங்களில் குரு மற்றும் புதன், ‘கேந்திராதிபத்ய தோஷம்’ பெற்ற கிரகங்கள் என்பதால், மறைவிடத்தில் இருக்கும்பொழுது யோகம் செய்யும். இருப்பினும் அஷ்டமத்துச் சனியும், அஷ்டமத்து குருவும் பலம் பெற்றிருப்பதால் நினைத்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கலாம். அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது தடைகள் வந்து கொண்டுதான் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் மேலோங்கும்.
மகர - புதன் வக்ரம்
உங்கள் ராசிநாதனாக விளங்கும் புதன், ஜனவரி 21-ந் தேதி மகர ராசியில் வக்ரம் பெறுகின்றார். பிப்ரவரி 10-ந் தேதி வக்ர நிவர்த்தியாகின்றார். இக்காலத்தில் உங்களுக்கு நன்மைகளே கிடைக்கும். ஆயினும் சுக ஸ்தானாதிபதியாக புதன் விளங்குவதால், மருத்துவச் செலவு உண்டு. சுபவிரயங்களை செய்வதன் மூலம் வீண் விரயங்கள் குறையும். தாய் உடல்நலத்திலும், வாகனத்தில் சொல்லும் பொழுதும் கவனம் தேவை.
மகர - குரு சஞ்சாரம்
ஜனவரி 22-ந் தேதி குரு பகவான் மேலும் வலிமை இழக்கின்றார். தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், நீச்சம்பெற்று சனியோடு இணைவதால் நீச்ச பங்கமும் அடைகின்றார். எனவே வாழ்க்கைத் துணையோடு அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படலாம். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாத சூழ்நிலை உருவாகும். இளைய சகோதரத்தோடு பகை ஏற்படலாம். உத்திேயாகத்தைப் பற்றிய கவலை மேலோங்கும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். அங்கு புதனோடு இணைந்து ‘புத - சுக்ர யோக’த்தை உருவாக்குவதால் முன்னேற்றப் பாதை புலப்படும். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
இம்மாதம் புதன்கிழமை தோறும் அனுமனை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 17, 18, 21, 22, 27, 28, பிப்ரவரி: 1, 2மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் விரயங்கள் கூடும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். அஷ்டம ஸ்தானம் வலுவடைவதால் நிதானத்துடன் செயல்படுங்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரிபவா்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லை உண்டு. சனி, குரு வழிபாடு நன்மை தரும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும்
(மிருகசீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)
மிதுன ராசி நேயர்களே! வந்துவிட்டது புத்தாண்டு. வளர்ச்சியிலும் தளர்ச்சியிலும் சிக்கித்தவித்த உங்களுக்கு, இனி மலர்ச்சி கிடைக்கப் போகின்றது. ‘ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வந்துவிட்டதே’ என்று நீங்கள் கவலைப் பட வேண்டாம். சனியோடு, குரு பகவான் வீற்றிருந்து நற்பலன்களை வழங்குவதற்கு வழிவகுத்துக் கொடுப்பார். பொதுவாகச் சனி தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரியளவில் பாதிப்புகளை உருவாக்க மாட்டார். ஆயினும் தொழில் மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்ற மாற்றங்கள் உருவாகும் விதத்தில் தானாகவே மாறுபாடு ஏற்படும்.
குருச்சந்திர யோகத்தோடும், நீச்சபங்க ராஜயோகத்தோடும் இந்த ஆண்டு பிறக்கின்றது. தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், எதிர்பார்க்கும் நேரங்களில் தனவரவு கிடைத்து எப்படியாவது காரியத்தை முடித்துவிடுவீர்கள்.
புத்தாண்டின் தொடக்க நிலை
உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் மறைந்திருக்கின்றார். ‘மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்’ என்பார்கள். எனவே தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். சூரிய பலம் ஏழில் இருப்பதால் பொதுவாழ்வில் திடீர் முன்னேற்றங்கள் வரலாம். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். ஆயினும் உங்கள் முன்கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்கவும் நேரிடும். உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியான சுக்ரன், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். பிள்ளைகளால் விரயம் உண்டு. ‘பிள்ளைகள் நம் சொற்படி கேட்கவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் இருக்கின்றார்கள். விரய ஸ்்தானத்தில் ராகு இருந்தாலும் பணம் தேவைப்படும் நேரங்களில் வந்து கொண்டே இருக்கும்.
எதிரிகள் ஸ்தானத்தில் கேது இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் உருவாகலாம். 6-ம் இடத்திற்கு அதிபதியாக செவ்வாய் விளங்குவதால், ஒருசில உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவு தராமல் இருக்கலாம். அவர்களை அரவணைத்துச் செல்வதன் மூலம் குடும்ப பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு காண இயலும். தொழில் ஸ்தானாதிபதியான குரு நீச்சம் பெற்றிருப்பதால், இந்த ஆண்டு முழுவதும் தொழில் வளம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.
மகர குருவின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான், இப்பொழுது அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும் அவர் பார்வை படும் இடங்கள் எல்லாம் புனிதமடைந்து நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குரு பகவான் நீச்சம் பெற்று சஞ்சரிப்பதால், அஷ்டமத்து குருவால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் நீங்கள் எதைச் செய்ய நினைத்தாலும் அதை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்தால் நன்மை ஏற்படும். களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாமிடத்திற்கு அதிபதியாக குரு பகவான் விளங்குவதால் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலமே ஒற்றுமை பலப்படும். குரு நீச்சம் பெற்றிருப்பதால் பிள்ளைகளையும் உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வதே சிறந்தது.
தொழில் ஸ்தானாதிபதியாக விளங்கும் குரு பகவான் இந்த ஆண்டு நீச்சம் பெறுகின்றார். இருப்பினும் நீச்சம் பெற்ற குரு பகவான், ஆட்சி பெற்ற சனியோடு இணைந்திருப்பதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. எனவே தடம் மாறிச் சென்ற தொழில், இனி தனவரவைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாகவே இருக் கும். பணியிட மாற்றங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து கொடுக்கும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. அந்த அடிப்படையில் மகர குருவின் சஞ்சார காலத்தில் விரய ஸ்தானத்திலும், தன ஸ்தானத்திலும் குரு பகவான் பார்வை பதிவதால் விரயத்திற்கேற்ற பணவரவு வந்து கொண்டே இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லம் கட்டும் வாய்ப்பு கைகூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாவதோடு எதிர்பார்த்த ஊதியமும் கிடைக்கலாம்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். கோடி நன்மை தரும் குருவின் பார்வை என்பதால் உடல் நலம் சீராகும். உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ளும். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். கல்யாண முயற்சிகள் கைகூடும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு உன்னத நிலையைக் காண்பர். வாகனம் வாங்க, வீடு கட்ட, கேட்ட சலுகைகள் கிடைக்கும். சகோதர சச்சரவுகள் அகலும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் வந்து அகலும். நீங்கள் நல்லது செய்ய நினைத்தாலும் அது தீமையாகவே தெரியும். தொழிலில் சில ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். வளர்ச்சி ஏற்படும் என்று நீங்கள் நினைத்த ஒரு காரியம் விரயத்தை உருவாக்கிவிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். சகப் பணியாளர்களால் உங்கள் முன்னேற்றம் குறையலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் ஏற்படும். கூட்டாளிகளின் குணமறிந்து நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. ஆரோக்கியத்தில் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் தோன்றலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும், 9-ம் இடத்திற்கும் அதிபதியாக அவர் விளங்குவதால் திடீர் திடீரென மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். தெய்வீக சிந்தனைகளின் மூலமே அவற்றை நல்ல விதமாக மாற்றிக்கொள்ள இயலும். உடல்நலத் தொல்லை, உடன் இருப்பவர்களால் தொல்லை போன்றவை உருவாகும். உங்கள் முன்னேற்றத்திற்கு உறவினர்களே முட்டுக்கட்டையாக இருக்கலாம். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் வந்து சேரலாம். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பங்காளிப் பகை அதிகரிக்கலாம். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் சனி கவசம் பாடிச் சனி பகவனை வழிபடுவது நல்லது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரையான காலகட்டம், செவ்வாய்-சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் மிகமிக விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே அவற்றின்் பார்வை காலத்தில் உத்தியோகத்தில் இருந்து திடீரென விலக நேரிடலாம். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். நிதானமும், பொறுமையும் மிகமிகத் தேவை. எந்தக் காரியத்தையும் முடிவடைவதற்கு முன்னால் வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் தாமதப்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்படலாம். விரயங் கள் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் மீது குறை கூறிக்கொண்டே இருப்பர். ‘பிள்ளைகள், படிப்பில் கவனம் செலுத்தவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். உதவி செய்த உறவினர்கள் உங்கள் மீது பகை உணர்ச்சி கொள்வர்.
வளர்ச்சி தரும் வழிபாடு
உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது. அனுகூல நட்சத்திரமன்று, நின்ற கோலத்து பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் தேவை. வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்வது நல்லது. தாய் மற்றும் சகோதர வர்க்கத்தினர் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது சந்தேகம்தான். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சனி-செவ் வாய் பார்வை காலத்தில் நிதிப்பற்றாக்குறை உருவாகி கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். பிறரை நம்பி செய்த காரியங்கள் முடிவடையாமல் போகலாம். ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு உடல்நலக்குறைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்கள் தங்கள் பொறுப்பைப் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
அஷ்டமத்தில் வருகிறது சனி, அமைதிதான் தேவை இனி! மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. ஆயுள் ஸ்தானம், பிதுர்ரார்ஜித ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, 8-ம் இடம் சனிக்கு ஆட்சி வீடாகவும், சொந்த வீடாகவும் இருக்கின்றது. எனவே விரயங்கள் ஏற்பட்டாலும், சுப விரயங்களே அதிகரிக்கும். இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள், தொழில் மாற்றங்கள் இயற்கையாகவே வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை கொடுத்தாலும் மீண்டும் கடன் வாங்கும் அமைப்பு உருவாகும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். மனநிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் மனதிற்கு ஏற்ற விதம் அமையாது. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிப் போகலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். வாகனங்களாலும் தொல்லை ஏற்படும். இதை ஒரு சோதனைக் காலமாகக் கூடக் கருதலாம். இருந்தாலும் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், புத்திரப்பேறு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களில் அதன் பார்வை பதிவதால் அவற்றில் எல்லாம் மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக 2-ம் இடத்தில் சனியின் பார்வை பதிவதால், குடும்பத்தில் பிணக்குகள் அதிகரிக்கும்.
சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களாக சுய முடிவடுத்து ஏதேனும் காரியங்கள் செய்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க நேரிடும். சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பழைய தொழிலில் அக்கறை செலுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகலாம். இதுவரை உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருந்த உடன்பிறப்புகள் விலகக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு தனாதிபதியாக விளங்குவதால் தொழில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் வந்துசேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, துரித கதியில் முன்னேற்றங்கள் ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு, இடம், வாங்கும் யோகம் உண்டு. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். அங்ஙனம் சஞ்சரிக்கும்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மாறுகின்றது. எனவே இல்லம் தேடி இனிய பலன்கள் வரப்போகின்றது. அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பு கிடைக்கப் போகின்றது.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப் பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் தடைகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கூடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் மாற்றங் கள் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றங்கள் வந்து சேரலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சி காலம்
21.3.2020-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அப்பொழுது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால், வியாபார விருத்தி ஏற்படும். இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் முன்னேற்றம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் விஷ்ணு படம் வைத்து விஷ்ணு கவசம் பாடி வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாகவே அமையும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். உறவினர் பகை மாறும். 9-ம் இடத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால் ஒருசில சமயங்களில் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில், தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் தேவைப்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொண்டால் பிரச்சினைகள் ஏற்படாது. தாய் மற்றும் சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் வரலாம். விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திற்காகவும் செலவிடுவீர்கள். சனியின் வக்ர காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
பனிரெண்டில் ராகு வருகிறது..பல வழிகளில் விரயம் உண்டு..
மிதுன ராசி நேயர்களே!
செப்டம்பர் 1-ந் தேதி உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் அமரப்போகிறார்கள். ஜென்மத்தை விட்டு பாம்பு கிரகம் விலகும் பொழுது, நல்ல பலன்களை வழங்கும் என்பது ஜோதிட நியதி.
நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு பகவான் செல்கின்றார். அங்கிருந்து கொண்டு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு சனி வந்து அஷ்டமத்துச் சனியாக அமையப் போகின்றார். அதன்பிறகு நவம்பர் 2021-ல் கும்ப ராசிக்கு குரு செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியையும், மேலும் 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார்.
இடமாற்றங்களால் இனிமை தரும் ராகு!
எதிரிகளோடு போராட வைக்கும் கேது!
ராகு இப்பொழுது சஞ்சரிக்கப் போகும் இடம் 12-ம் இடமாகும். எனவே விரயங்கள் அதிகரிக்கும் என்பது பொது நியதி. இருப்பினும் 12-ம் இடம் என்பது பயணம், தியாகம், கடன் தீர்த்தல், இடமாற்றம், பணி நீக்கம், உடல்நலக் குறைபாடு, மனப்போராட்டம், மூதாதையர் சொத்துக்கள் போன்றவற்றையும் குறிக்கும் இடமாகும். எனவே அங்கு வரும் ராகுவால் உலுக்கி எடுத்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மாறும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். தூரதேசத்தில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விருப்பம் போல் அமையும்.
6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றின் தன்மையை அதிகரிக்கலாம். அதே நேரத்தில் புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணிநிரந்தரம் ஆகாதவர்களுக்கு பணிநிரந்தம் ஆகும். உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் உண்டு. ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல்நலச் சீர்கேடுகள் உண்டாகலாம்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நீடித்த நோய் அகல நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். செவ்வாய், உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி. உள்நாட்டில் உங்கள் தொழில், வளர்ச்சி அடைவது மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் அழைப்புகள் வரலாம்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியானவர் சந்திரன் ஆவார். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்குமிடம் இரண்டாமிடமாகும். அந்த இடத்திற்குரிய அதிபதியின் சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த நற்பலன்களைக் கொடுப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனக்குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். மக்கள் செல்வங்களின் கல்யாணக்கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி கைகூடும். வீடு கட்ட வேண்டும் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்க வேண்டுமென்று நீங்கள் நினைத்திருந்தால் அந்த எண்ணங்கள் ஈடேறும்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குறிப்பாகப் பெற்றோர்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வெற்றிக்குரிய ஸ்தானம் 3-ம் இடமாகும். அந்த இடத்திற்குரிய கிரகம் சூரியனாவார். அவரது சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, நன்மைகளை அதிகம் எதிர்பார்க்கலாம். வழக்குகள் சாதகமாக முடியக்கூடிய சூழ்நிலை உண்டு. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். சகோதர வழியில் திருமணம் முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அது நிறைவேறும். உத்தியோகம் மூலம் நீண்டதூரப் பயண வாய்ப்புகள் வரலாம்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப ஒற்றுமை பலப்படும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆயினும் தேக ஆரோக்கியத்தில் மட்டும் ஏதேனும் தொல்லை வந்து கொண்டே இருக்கும். உணவுக்கட்டுப்பாடு அவசியம் தேவை. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரலாம். தாயின் ஆதரவு கிடைக்கும். ‘இடம், பூமி வாங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் வீடுகட்டிக் குடியேற முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது தாமதங்கள் அகலும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவரது சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது பணப்புழக்கம் அதிகரித்தாலும் மனக்குழப்பம் கூடுதலாகவே இருக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையலாம். அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். வாகன மாற்றம் செய்ய விரும்புபவர்கள் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. மனஉறுதி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நேரமிது.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு பகவான், உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். களத்திர ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு வின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பர். தகராறுகள் தானாக விலகும். ‘மகப்பேறு கிட்டவில்லையே’ என்று ஏங்கும் தம்பதியர்களுக்கு அதுவும் கைகூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வீடு மாற்றங்கள், அல்லது உத்தியோக மாற்றங்கள் முறைப்படி நிகழும். ஒருசிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
வளர்ச்சி தரும் வழிபாடு
12-ம் இடத்து ராகுவால் பலன்கள் திருப்திகரமாகக் கிடைக்கவும், 6-ம் இடத்து கேதுவால் சீரான வாழ்க்கை அமையவும் உளுந்து, கொள்ளு ஆகியவற்றை அனுகூல நாளில் தானமாக கொடுக்கலாம். தேய்பிறை அஷ்டமியில் இல்லத்து பூஜை அறையில் யோக பைரவருக்குரிய பாடலைப் பாடி வழிபடுவது நல்லது.
பெண்களுக்கு...
ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் அன்றாடப் பணிகளைச் செவ்வனே செய்வீர்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும். உறவினர்களால் சில தொல்லைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். திருவாதிரை விரதமும், நடராஜர் வழிபாடும் நன்மை தரும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
எட்டில் வந்தது குரு பகவான், எதிலும் கவனம் இனி தேவை!
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 8-ம் இடத்திற்கு செல்கின்றார். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் தொடங்குகின்றது. மேலும் 8-ம் இடத்திற்கு வரும் குரு பகவான் நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். ‘கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறும்பொழுது, யோகத்தை வழங்கும்’ என்பது நியதி. எனவே, அஷ்டமத்து குருவால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் திடீர் இடமாற்றங்கள், தொழில் மாற்றங்கள், பிள்ளைகளால் பிரச்சினைகள், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத நிலை போன்றவை ஏற்படலாம். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் வாசல் தேடி வரும். இடர்பாடுகள் ஏற்படுமேயானால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக்கொள்ள இயலும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான், உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். அதே சமயம் விரய ஸ்தானத்தையும் பார்ப்பதால் வீண் விரயம் ஆகாமல் சுபவிரயமாகவும் அமைத்துக்கொடுக்கும். இல்லற வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது முதல் இல்லம் கட்டிக் குடியேறும் அமைப்பு வரை, சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டும் வல்லமை குருவின் பார்வைக்கு உண்டு. பற்றாக்குறை பட்ஜெட் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றமும் கிடைக்கலாம். கூட்டுக்குடும்பத்தில் இருந்த பிரச்சினை தீரும்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டு. அதைப் பராமரிக்கும் சூழ்நிலையும் உருவாகும். குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சகோதர வழியில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்திற்கு அதிபதியானவர் சூரியன். அதாவது சகோதர சகாய ஸ்தானத்திற்கு அதிபதி. அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சகோதர ஒற்றுமை பலப்படும். இதுவரை விலகி இருந்த உடன்பிறப்புகள் தானாக வந்து இணையலாம்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியாவார். 2-ம் இடம் என்பது தன ஸ்தானம் ஆகும். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். பகல், இரவாக பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மனக்கலக்கம் அகலும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியங்கள், இப்பொழுது படிப்படியாக நடைபெறும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக செவ்வாய் சாரத்தில் சஞ்சரிப்பதால், சில மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். உத்தியோகத்தில் ஒருசிலருக்கு பிரச்சினைகள் உருவாகலாம். சகப்பணியாளர்களால் தொல்லை உண்டு. உங்கள் முன்னேற்றத்தை முன்னதாகவே சொல்லப்போய் அதனால் பிரச்சினைகள் உருவாகும். உடல் நலனிற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. தொழிலில் நம்பிக்கைக்குரியவர்கள் அமைய மாட்டார்கள். ‘எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்புகளாலும் பிரச்சினை, உடன் இருப்பவர்களாலும் பிரச்சினை ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் உண்டு. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நில விற்பனை சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம், கவனம் தேவை.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை உங்கள் ராசியில் பதிந்து ராசியைப் புனிதப்படுத்துகின்றது. எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு தேடி வந்து கொண்டேயிருக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். குருவின் பார்வை 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் ஆதாயம் கிடைக்கும் நேரமிது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை, குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் எதைச் செய்தாலும் அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்கள் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். தொழிலில் பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடனை திருப்பிக் கேட்பதன் மூலம் உறவினர் பகை உருவாகிவிடும். பணியாளர்களும் திடீர் திடீரென விலக நேரிடும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் புதன்கிழமை தோறும் விஷ்ணு, லட்சுமி படம் வைத்து விஷ்ணுவிற்கு உரிய பதிகங்களைப் பாடி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதன் மூலமும் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி நன்மையும், தீமையும் கலந்த பெயர்ச்சியாகவே அமையும். அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாய் தந்தையரின் அன்பும், பாசமும் ஓரளவு கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் மேற்படிப்பு, கல்யாணம் போன்றவற்றை பெரும் பிரயாசை எடுத்தே முடிக்க இயலும். பணிபுரியும் பெண்களுக்கு திடீரென இடமாற்றங்கள் ஏற்படலாம். எதையும் யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. துர்க்கை வழிபாடு துயரம் தீர்க்கும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/27/2021 9:43:22 PM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Gemini