தமிழகம் முழுவதும் 29ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் வரும் 29ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
வரும் 29-ஆம் தேதி அதிமுக சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
'இரண்டாண்டு இருண்ட திமுக ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 29.05.2023 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.