ஐபிஎல்: 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி...!


ஐபிஎல்: 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி...!
x
தினத்தந்தி 16 May 2023 11:41 PM IST (Updated: 16 May 2023 11:42 PM IST)
t-max-icont-min-icon

16-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் களமிறங்கிய க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் ஸ்டோனிஸ் அரைசதம் கடந்தார். முடிவில், லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் மும்பை அணியில் முதலில் களமிறங்கிய இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஜோடி நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

அவரையடுத்து, களமிறங்கிய நேஹால் வதேரா மற்றும் டிம் டேவிட் தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் எடுக்க, வதேரா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பரபரப்பான ஆட்டத்தின் இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட், கேமரூன் கிரீன் களத்தில் நின்றனர். இருந்தும் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 59 ரன்களும், ரோஹித் சர்மா 37 ரன்களும், டிம் டேவிட் 32* ரன்களும் குவித்துள்ளனர். லக்னோ அணியில் ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


Next Story