

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 56). இவர் அம்மாபாளையம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு கணேசன் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை கணேசனின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு(ஷட்டர்) திறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த கணேசன் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது இரு சக்கர வாகனத்தின் உதிரிபாகமான சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 10 செயின் பிராக்கெட் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.500 திருட்டு போயிருந்தது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.