
தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக பனையூரில் உள்ள வீட்டில் விஜய் வெளியே எங்கும் செல்லாமல் முடங்கினார். இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, கட்சி பணிகளில், விஜய் மற்றும் மாநில நிர்வாகிகள், மீண்டும் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர்.
இந்த சூழலில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.






