நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மருத்துவ சிகிச்சைக்கு உதவக்கோரி முதல்-அமைச்சர் விஜய்க்கு, முத்துக்காளை வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
நடிகர் முத்துக்காளையின் மனைவி  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Published on

சென்னை,

பிரபல நடிகர் முத்துக்காளை ஒரு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில் தன்னுடைய மனைவியின் உயிரைக் காப்பாற்றித் தரும்படி, முதல்-அமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்தார்.

வீடியோவில் பேசும்போது, “என் மனைவி மாலதி, தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். எனவே என்னுடைய மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் விஜய் உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து, முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர் ராஜ்மோகன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று முத்துக்காளையின் மனைவியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி ஆஸ் பத்திரியின் டீன் டாக்டர் கவிதாவிற்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சில நாட்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்கு உதவக்கோரி முதலமைச்சர் விஜய்க்கு, முத்துக்காளை வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அரசுத் தரப்பிலும் அதற்கான உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது நடிகர் முத்துக்காளையின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com