மாரி செல்வராஜ் உணர்வுபூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார்- அண்ணாமலை பாராட்டு


மாரி செல்வராஜ் உணர்வுபூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார்- அண்ணாமலை பாராட்டு
x
தினத்தந்தி 23 Oct 2025 2:38 PM IST (Updated: 24 Oct 2025 5:14 PM IST)
t-max-icont-min-icon

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.

இந்தநிலையில். 'பைசன்' படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, "பைசன்" படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ள, பைசன் - காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுபூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களது வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்ராஜ் அவர்கள். அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் மணத்தி கணேசன் அவர்கள் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகன் துருவ், இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் பசுபதி அவர்கள், லால் அவர்கள் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story