'சீதையாக நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்’ - 'ராமாயணம்' பட விழாவில் சாய் பல்லவி உருக்கம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தில் ராவணனாக யாஷ் நடித்துள்ளார்.
 சாய் பல்லவி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற 'ராமாயணம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சாய் பல்லவி உரையாற்றினார். அப்போது, சீதையாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

'சீதையின் பண்புகளை உணர்ந்து நடித்தேன்'

எதிர்கால சந்ததியினருக்கான ஒரு காவியமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது என்று கூறிய சாய் பல்லவி, சீதையின் குணநலன்களையும் பண்புகளையும் திரையில் இயல்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தியானித்து நடித்ததாக பகிர்ந்துகொண்டார். மேலும், இந்த படத்திற்காக படக்குழுவினர் கடந்த 10 ஆண்டுகளாக கடினமாக உழைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரமாண்ட நட்சத்திர பட்டாளம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். யாஷ் ராவணனாக நடித்துள்ள நிலையில், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணராகவும் நடித்துள்ளனர்.

தீபாவளிக்கு வெளியாகும் 'ராமாயணம்'

இந்த பிரமாண்ட படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வரவிருக்கும் தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com