ஜுங்கா


ஜுங்கா
x
தினத்தந்தி 29 July 2018 5:10 PM GMT (Updated: 29 July 2018 5:10 PM GMT)

கதாநாயகன் விஜய் சேதுபதி, கதாநாயகி சாயிஷா, டைரக்‌ஷன் கோகுல், பூர்வீக சொத்தை மீட்க ஒரு இளைஞரின் போராட்டம், படத்தின் சினிமா விமர்சனம் பார்க்கலாம்.

கதையின் கரு:  கதை, ஒரு போலீஸ் நிலையத்தில் ஆரம்பிக்கிறது. காவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதி விஜய் சேதுபதியை ‘என்கவுன்ட்டரில்’ போட்டுத் தள்ளும்படி, உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதை ஏற்று, ‘என்கவுன்ட்டர்’ நடத்த ஒரு போலீஸ் படை புறப்படுகிறது. வழியில், விஜய் சேதுபதி தன் முன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். அவருடைய கடந்த காலம், ‘பிளாஷ்பேக்’ ஆக விரிகிறது.

அதில், விஜய் சேதுபதி நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய அம்மா சரண்யா பொன்வண்ணன். “நாம் ஏழைகள் அல்ல. நமக்கு சொந்தமாக ஒரு சினிமா தியேட்டர் இருந்தது” என்ற தகவலை சொல்கிறார். அந்த பூர்வீக சொத்தை வில்லனும், சாயிஷாவின் தந்தையுமான சுரேஷ் மேனன் ஏமாற்றி அபகரித்துக் கொள்ள-அவரிடம் இருந்து தியேட்டரை மீட்க-விஜய் சேதுபதி முயற்சிக்கிறார். இதற்காக, வெளிநாட்டில் இருக்கும் சாயிஷாவை கடத்த முடிவு செய்து, நண்பன் யோகி பாபுவுடன் விஜய் சேதுபதி வெளிநாட்டுக்கு பறக்கிறார்.

அங்கே சாயிஷாவின் அழகைப் பார்த்து மயங்கி காதல்வசப்படுகிறார். இந்த நிலையில், சாயிஷாவை தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். கடத்தல்காரர்களிடம் இருந்து சாயிஷாவையும், அவருடைய அப்பா சுரேஷ்மேனனிடம் இருந்து தியேட்டரையும் விஜய் சேதுபதி எப்படி மீட்கிறார்? என்பது மீதி கதை.

நகைச்சுவையும், அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த கதை. அதில், விஜய் சேதுபதி நூற்றுக்கு நூறு பொருந்துகிறார். மீசையில்லாத முகம். லேட்டஸ்ட் சிகையலங்காரம். அவருடைய புதிய தோற்றம் கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்துகிறது. சாயிஷா பாரீசில் இருக்கிறார் என்பதை தவறாக புரிந்து கொண்டு சென்னை பாரிமுனையில் போய் தேடுவது, பாரீஸ் நகரின் நட்சத்திர ஓட்டலில் சாயிஷாவை பார்த்து காதல்வசப்படுவது, ஒரு டான் காதல்வசப்படக் கூடாது என்று தன்னைத்தானே திருத்திக் கொள்வது, “இப்ப கூட உன்னை லாக் பண்ணிடுவேன். ஆனால் முடியாது...லவ் பண்ணிட்டேன்” என்று ஆதங்கப்படுவது...என விஜய் சேதுபதி படம் முழுக்க ரசனை கூட்டுகிறார்.

சாயிஷாவுக்கு. பளபள என்று பளிச் தோற்றம். ஜாடிக்கு ஏற்ற மூடி மாதிரி, கதாபாத்திரத்துக்கு ஏற்ற கதாநாயகி. மடோனா செபாஸ்தியன், ஆரம்ப காட்சிகளில் வந்து போகிறார். படத்தை கலகலப்பாக வைத்திருப்பதில், யோகி பாபுவுக்கு நிறைய பங்கு. வயதான தாதாவாக ராதாரவி.

துடைத்த கண்ணாடி மாதிரி காட்சிகளில், அத்தனை புத்துணர்வு. உபயம்: ஒளிப்பதிவாளர், டட்லீ. பசுமை போர்த்திய மலைகளும், புல்வெளிகளுமாக வெளிநாட்டு காட்சிகள், கண்களுக்கு மெகா விருந்து. பின்னணி இசையால் கதையுடன் ஒன்ற வைக்கிறார், இசையமைப்பாளர் சித்தார்த் விபின். கோகுல் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. ஒரு கோடி ரூபாயை விஜய் சேதுபதி மிக சுலபமாக புரட்டுவதும், மைனஸ் டிகிரி குளிரில் நதியில் நீந்தி செல்வதும், வெளிநாட்டு போலீசிடம் இருந்து குற்றவாளியாக தப்பி ஓடுவதும்-நம்ப முடியாத காட்சிகள்.

ஆரவாரமான வசன காமெடி காட்சிகள், குறைகளை மறக்க வைத்து, படத்தை தூக்கி நிறுத்துகின்றன.


Next Story