கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு


கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு
x
தினத்தந்தி 7 Feb 2020 5:45 PM GMT (Updated: 7 Feb 2020 5:45 PM GMT)

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகியுள்ள சீறு படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

கதையின் கரு:  ஜீவா, மாயவரத்தில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார். அவருடைய ஒரே தங்கை காயத்ரி. தங்கை மீது உயிரையே வைத்து இருக்கிறார், ஜீவா. நிறைமாத கர்ப்பமாக இருக்கும் காயத்ரிக்கு வலிப்பு நோய் இருந்து வருகிறது. பிரசவ வலி வரும்போது, வலிப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் எச்சரிக்கிறார். அதனால் ஜீவா அருகிலேயே இருந்து தங்கையை கவனித்து வருகிறார். முக்கிய வேலையாக அவர் வெளியே போன நேரத்தில், காயத்ரிக்கு பிரசவ வேதனை ஏற்படுகிறது.

அப்போது கொலைகாரன் வருண், ஜீவாவின் வீட்டுக்குள் நுழைகிறார். பிரசவ வலியில் துடிக்கும் காயத்ரியை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவள் உயிரையும், குழந்தையின் உயிரையும் காப்பாற்றுகிறார். தங்கையின் உயிரை காப்பாற்றிய வருணை, ஜீவா நண்பராக பார்க்கிறார். வருணை கூட இருந்த அவருடைய நண்பர்களே அரிவாளால் வெட்டுகிறார்கள். குற்றுயிரும், குலை உயிருமாக கிடக்கும் வருணை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஜீவா காப்பாற்றுகிறார்.

வருணை கொல்ல அடியாட்களை ஏவிய நவ்தீப், ஜீவாவின் உயிருக்கு குறிவைக்கிறார். அவருடைய கொலை வெறியில் இருந்து ஜீவா தப்பினாரா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’ இந்த கதைக்குள், படிப்பில் சிறந்த மாணவி ஒருவரை நவ்தீப் கொடூரமாக கொலை செய்யும் கிளை கதையையும் செருகி, நெஞ்சை நெகிழவைக்கிறார்கள்.

புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் நெடுஞ்சாலையில், காரில் வரும் 2 பெண்களை போலீஸ் வேடத்தில் இருக்கும் ரவுடிகள் மடக்கி பாலியல் வன்முறை செய்ய முயற்சிப்பது போலவும், ‘பைக்’கில் சீறிப்பாய்ந்து வந்து ஜீவா, அந்த இரண்டு பெண்களையும் ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுவது போலவும், எம்.ஜி.ஆர். பட பாணியில் கதை தொடங்குகிறது.

ரொம்ப நாள் கழித்து ஜீவா பெருமைப்பட்டுக்கொள்கிற மாதிரி ஒரு படம். அவர் தங்கை மீது பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் உருக வைக்கிறது என்றால், சண்டை காட்சிகள், நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ஒட்டுமொத்த கதையும் அவர் மீது இருப்பதால், ஜீவா படம் முழுக்க வருகிறார். அவருடைய கோபமும், அதன் விளைவாக மோதுகிற சண்டை காட்சிகளும் நியாயமாக உள்ளதால், கதையுடன் ஒன்றவைக்கின்றன. ஜீவாவின் இயல்பான நடிப்பு, பாராட்டும்படி இருக்கிறது.

ரியா சுமன், அழகான கதாநாயகி. நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாத கதாபாத்திரம் என்பதால், இவருக்கு அதிக வேலை இல்லை. நகைச்சுவை நடிகர் சதீசும் ஒரு சில காட்சிகளில் தலையை காட்டுவதோடு சரி. இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த நவ்தீப், முக்கிய வில்லனாக மாறியிருக்கிறார். மிரட்டலுக்கு அவருடைய கண்களே போதும். படத்தை தூக்கி நிறுத்தும் இன்னொரு வில்லன், வருண். இவர் வருகிற காட்சிகளில், என்ன நடக்குமோ என்று பயப்படவைக்கிறார். ஜீவா தங்கையின் உயிரை காப்பாற்ற மனிதநேயத்துடன் வருண் உதவுகிற காட்சியில், தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.

இன்னொரு வில்லனாக ஆர்.என்.ஆர்.மனோகர் வருகிறார். ‘பிளஸ்-2’ தேர்வில் முதல் மார்க் வாங்கும் மாணவி சாந்தினி தொடர்பான காட்சிகள், பதறவைக்கின்றன. டி.இமான் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் தேறுகிறது. பின்னணி இசை, படத்தின் வேகத்துக்கு உதவியிருக்கிறது. பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு, படத்தின் ஜீவனாக அமைந்து இருக்கிறது.

படத்தின் முதல் பாதி, சூப்பர் வேகம். இரண்டாம் பாதியில், ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கிறது. கதையில், நிறைய திருப்பங்கள். எதிர்பாராத சம்பவங்கள். குறிப்பாக, அந்த பள்ளிக்கூட மாணவிகள் தொடர்பான காட்சிகள் புதுசாக இருக்கின்றன. இறுதி காட்சிகள், எழுந்து நின்று கைதட்டவைக்கின்றன.

Next Story