நவீன சானிட்டரி நாப்கினின் முன்னோடி


நவீன சானிட்டரி நாப்கினின் முன்னோடி
x
தினத்தந்தி 20 Dec 2021 5:30 AM GMT (Updated: 2021-12-18T16:10:12+05:30)

‘‘ஒவ்வொரு மனிதனும் படைப்புத் திறனுடன் பிறக்கிறான். எல்லோருக்கும் திறமை இருக்கிறது’’ என கூறிய கென்னரை நவீன சானிட்டரி பேட் உருவாக்கு வதற்கான முன்னோடி என்று கூறலாம்.

மாதவிடாய் காலத்திலும் பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்வதற்கு உதவும் வகையில், உள்ளாடையில் ஒட்டிக்கொள்ளும் வசதியுடன் கூடிய தற்போதைய சானிட்டரி நாப்கின்களுக்கு முன்னோடியாக இருந்தது ‘சானிட்டரி பெல்ட்’. 

19-ம் நூற்றாண்டின், 1970-ம் ஆண்டு வரை சானிட்டரி பெல்ட்கள் பயன்பாட்டில் இருந்தன. ‘சானிட்டரி பேடை’ வைத்து பயன்படுத்துவதற்காக அணியும் இந்த பெல்ட், இடுப்பில் அணியும் வகையில் இருக்கும். சிறப்பு கிளிப்புகள் மூலம் இணைக்கப்படும். இதனைக் கண்டுபிடித்தவர், ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பு இனத்தைச் சேர்ந்த மேரி பீட்ரைஸ் டேவிட்சன் கென்னர்.

1912-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள வட கரோலினாவில் கென்னர் பிறந்தார். சிறுவயதில் இருந்தே பொதுமக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் அவரது மனதில் இருந்தது. தனது தந்தையும், சகோதரியும் பல கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதைக் கவனித்து, தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று உற்சாகம் அடைந்தார். 

அவரது குடும்பத்தாரும், அவரது கண்டுபிடிப்புகளுக்கு மிகுந்த ஊக்கம் அளித்தனர். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அவருக்கு இடம் கிடைத்தது. ஓராண்டுக்குப் பிறகு நிதி பற்றாக்குறையால் அவர் கல்லூரியில் இருந்து விலகினார். தொடர்ந்து படிக்க முடியாவிட்டாலும், கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதில் முழு கவனம் செலுத்தினார்.

கென்னர் தொழில்முறை மலர் அமைப்பாளராக பணிபுரிந்தார். வாஷிங்டன் மாகாணத்தில் தனது சொந்த சிறு வணிகத்தை நிர்வகித்தார். கென்னரின் முதல் கண்டுபிடிப்பு ‘சானிட்டரி பெல்ட் மற்றும் ஈரப்பதம் இல்லாத நாப்கின் பாக்கெட்’ ஆகும். இது நவீன மாதவிடாய் பாதுகாப்பின் முதல் வடிவமாகக் கருதப்படுகிறது.

இது 70-களில் பயன்பாட்டில் இருந்த ‘மாக்ஸி பேட்’ (சுயமாக ஒட்டக்கூடியவை) உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. 

இந்த சானிட்டரி பெல்ட்டை அவர் கண்டுபிடித்து 30 வருடங்கள் வரை, அவருக்கு காப்புரிமை வழங்கப்படவில்லை. இந்தக் கண்டுபிடிப்பை பார்த்து அவரை அணுகிய சில நிறுவனங்களும், அதன் பிறகு அவரை நிராகரித்தன. கருப்பினத்தவர் என்ற காரணத்தால் தனது கண்டுபிடிப்பிற்காக எந்த விருதும், அங்கீகாரமும் அவர் பெறவில்லை.

ஆயினும் மனம் தளராத கென்னர், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட்டார். தனது கண்டுபிடிப்புகளை வைத்து எந்த வசதியும், வருமானமும் அவர் பெறவில்லை.

தனது பிற கண்டுபிடிப்புகளான ஷவர், சுவர்களில் பொருத்தப்பட்ட வாஷர் மற்றும் பாத்ரூம் டிஸ்யூ வைக்கப்படும் இயந்திரம் போன்ற ஐந்து கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். வரலாற்றில் ஆப்பிரிக்க - அமெரிக்க பெண்ணாக அதிக காப்புரிமை பெற்றவர் கென்னர்.

‘‘ஒவ்வொரு மனிதனும் படைப்புத் திறனுடன் பிறக்கிறான். எல்லோருக்கும் திறமை இருக்கிறது’’ என கூறிய கென்னரை நவீன சானிட்டரி பேட் உருவாக்கு
வதற்கான முன்னோடி என்று கூறலாம். இவர் 2006-ம் ஆண்டு, தனது 93-வது வயதில் இயற்கை எய்தினார். நவீன உலகத்து பெண்கள் அனைவரும் இவரை நிச்சயம் நினைவு கூர வேண்டும். 

Next Story