அம்மா உணவகத்தின் சேவையை விரிவுபடுத்த வேண்டும்


அம்மா உணவகத்தின் சேவையை விரிவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலையில் தரமான, உடல் உபாதை இல்லாத உணவை வழங்கும் அம்மா உணவகத்தின் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை

குறைந்த விலையில் தரமான, உடல் உபாதை இல்லாத உணவை வழங்கும் அம்மா உணவகத்தின் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அம்மா உணவகம்

ஏழை மக்கள், கூலித்தொழிலாளர்கள் தரமான உணவை மலிவு விலையில் சாப்பிடுவதற்காக 2013-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா சிறப்பு வாய்ந்த அம்மா உணவகத்தை தொடங்கினார். சென்னையில் முதலில் தொடங்கப்பட்ட இந்த அம்மா உணவகம் பின்னர் தமிழகத்தின் மற்ற மாநகராட்சிகளிலும் தொடங்கப்பட்டது.

ஏழை, நடுத்தர மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்்த திட்டம் பிற்காலத்தில் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் பழைய பஸ் நிலையம், ஆற்காடு, மேல்விஷாரம், திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

தொழிற்சாலைகள் நிறைந்த இந்த ஊர்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். அவர்கள் குறைந்த விலையில் வயிராற சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.

கொரோனா போன்ற காலங்களில் மக்களுக்கு உணவளித்தது அம்மா உணவகங்கள்தான். பல அம்மா உணவகங்களில் உணவு இலவசமாகவே வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதலே அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விடும் என்ற தகவல் பரவி வருகிறது. அம்மா உணவகங்கள் செயல்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

குறைந்து வரும் கூட்டம்

எனினும் முன்புபோல் அம்மா உணவகங்களை நகராட்சி நிர்வாகங்கள் பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது. இங்கு சாப்பிட வருவோரின் எண்ணிக்கையும் முன்பிருந்ததைவிட குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது.

அரக்கோணம் அம்மா உணவகத்தில் முன்பு தினமும் சுமார் ரூ.3,600-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.2,500 வரை மட்டுமே உணவு வகைகள் விற்பனையாகிறது.

விற்பனை குறைந்த நிலையில் 8 பேருக்கு மட்டுமே வழங்கிய ஊதியம் 12 பேருக்கு பகிர்ந்து தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உணவகத்திற்கு வாகனம் மூலம் கொண்டு வரப்படும் அரிசி மூட்டைகளுக்கான கூலி, வாகன கட்டணம் ஆகியவை உணவக ஊழியர்களே பகிர்ந்து கொள்வதாகவும் உணவகத்தில் மின் விசிறிகள் மற்றும் மின்விளக்குகள் இயந்திரங்கள் பழுதானால் கூட நகராட்சி சரி செய்வதில்லை என்ற புகாரும் உள்ளது.சமையலறை உபகரணங்களும், குடிநீர் சுத்திகரிப்பு குழாய் பழுது ஏற்பட்டுள்ளது. கியாஸ் அடுப்பும் பழுதாகி விட்டதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காததால் ஆபத்தான நிலையிலேயே பணியாளர்கள் சமையல் செய்கின்றனர்.

சிற்றுண்டி சாப்பிட வந்தவர்கள் தெரிவித்த போது தரம் நன்றாக உள்ளது. ஆனால் முன்பு வழங்கிய அம்மா உணவக உணவு வகைகள் தற்போது விற்பனை செய்யாததால் இங்கு இருப்பதை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் வெளியில் உள்ள உணவகங்களை தேடி செல்ல வேண்டியுள்ளது என்று மனவருத்தப்பட்டுக்கொண்டனர்.

சேவை தொடர வேண்டும்

மேல்விஷாரம் அம்மா உணவகத்திற்கு உணவு சாப்பிட வந்த சலீம் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை வீரர் சக்கரவர்த்தி, டீ மாஸ்டர் மொய்தீன்:

நாங்கள் தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுகிறோம். இங்கு சமைக்கப்படும் உணவுகள் தரமானதாகவும், சுவையாகவும் உள்ளது.

சலீம் நகர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி: தினசரி கூலி வேலைக்கு செல்கிறேன். வீட்டில் சமைக்க போதுமான நேரம் இல்லை. எனவே நான் காலை மற்றும் மதிய வேளையில் அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுகிறேன். இங்கு சமைக்கப்படும் உணவுகள் தரமாக இருப்பதால் எந்த விதமான உடல் உபாதையும் ஏற்படுவதில்லை.

வீட்டு சாப்பாடுபோல் உள்ளது

ஊர்க்காவல் படையை சேர்ந்த பாண்டியன்:

நான் காலையில் தினமும் இங்கு வந்து உணவருந்தி விட்டு செல்கிறேன். வீட்டு சாப்பாடு போல் உணவுகள் நன்றாக உள்ளது.

கார் டிரைவர் சந்திரசேகர்: நான் கார் டிரைவராக பணியாற்றுகிறேன். என்னைப்போன்றவர்களுக்கு அம்மா உணவகம் ஒரு வரப்பிரசாதம். உணவு நன்றாக உள்ளது. அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்பட்டு, எங்களைப் போன்றவர்களுக்கு பசியாற்றிட வேண்டும். நான் பல இடங்களில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு அருந்தி உள்ளேன். அவை எல்லாவற்றையும் விட ராணிப்பேட்டை அம்மா உணவகத்தில் தரப்படும் உணவுகள் தரமாக இருக்கிறது.

இவ்வாறு ஏராளமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆந்திரா போன்ற மாநிலங்கள் தமிழகத்தை முன்னுதாரணமாக வைத்து அந்த மாநிலங்களில் இதுபோன்ற உணவகங்களை செயல்படுத்தி வருகின்றன. இது அந்த மாநில மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. எனவே அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது.

மின்விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதான அம்மா உணவகம்

வாலாஜா பஸ் நிலையம் எதிரில் பழைய தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் முன்பு இருந்ததுபோல் இல்லாமல் தற்போது பாதி அளவே சமையல் செய்கிறார்கள். அது உணவகம் திறந்து சில மணி நேரங்களிலேயே தீர்ந்து விடுகிறது. இதனால் இந்த உணவகத்தை நம்பி வருபவர்கள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.

இந்த உணவகத்தில் முன்பு காலையில் இட்லி, வடை, பொங்கல், மதியம் பிரிஞ்ச் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது காலையில் இட்லியுடன் சாம்பார் மட்டுமே வழங்கப்படுகிறது. இப்போது மதிய வேளையில் சாம்பார் சாதம், தயிர்சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது.

முன்பு இந்த உணவகத்தில் 13 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இப்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். இங்குள்ள 4 மின்விசிறிகளும் பழுதடைந்து உள்ளது. சாப்பிட வருபவர்கள் வியர்க்க விறுவிறுக்க சாப்பிட வேண்டிய சூழல் இருக்கிறது. உணவக கட்டிட வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மின்விளக்கு திருட்டு போய்விட்டது. மீண்டும் புதிய மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. உள்ளே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் சரியாக இயங்கவில்லை.

உணவகம் முன்பு ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் உணவகத்திற்கு வரும் முதியவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story