காரணமே இல்லாமல் சோகமாக இருக்கிறீர்களா?


காரணமே இல்லாமல் சோகமாக இருக்கிறீர்களா?
x
தினத்தந்தி 3 Jan 2022 5:30 AM GMT (Updated: 1 Jan 2022 11:59 AM GMT)

மனதில் வெறுமை குடிகொள்ளும் நேரங்களில், உங்கள் வாழ்வில் நடந்த எந்தவொரு எதிர்மறையான விஷயத்தையும் நினைத்துப் பார்த்தலோ, அசைபோடுதலோ கூடாது. அது இந்த மனநிலையை இன்னும் தீவிரமடையச் செய்யும்.

வாழ்வில் நடக்கும் எதிர்மறையான விஷயங்களும், ஏமாற்றங்களும் நம்மை சோகத்தில் ஆழ்த்தும். எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்க்கை சீராக போய்க் கொண்டிருக்கும்போதும், எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கும் போதும் சில நேரங்களில், சிலருக்கு மனதில் சோக உணர்வு ஏற்படும்.

அதைக் கவனித்து, “ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?” என யாராவது கேட்டால், “தெரியல” என்ற ஒற்றை வார்த்தை பதிலாக வரும். அதுதான் உண்மையும் கூட. எவ்வித காரணமுமின்றி, திடீரென நம் மனதில் வெறுமை உணர்வு ஏற்படும். அதற்கான காரணங்கள் புரியாமல் சில நிமிடங்கள் மவுனமாக, விரக்தியோடு, அமைதியாக அமர்ந்திருப்போம்.

இவ்வாறு காரணமற்று தோன்றும் வெறுமை உணர்வு பலருக்கும் ஏற்படும் இயல்பான உளவியல் சார்ந்த பிரச்சினை. அதை சரியான முறையில் கடந்துவிடும்போது, இயல்பு நிலைக்குத் திரும்பி விடலாம். கடக்க முடியாமல் அந்த வெறுமையிலேயே நம்மை அறியாமல் மூழ்கும்போதுதான், அது நம்மை ஆட்கொண்டு, மனநலத்தைப் பாதிக்கிறது. காரணமற்ற வெறுமை சூழும் அந்த நொடிகளைக் கையாள்வதற்கு நாம் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும் உள்ளன.

செய்ய வேண்டியவை:
கண்ணை மூடி, மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து வெளிவிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சுவாசம் சீராகி, உடலும், மனமும் நிதானம் அடையும்.

அந்த நொடியில் உங்களுக்குப் பிடித்த இடத்திற்கு விரைந்து செல்வது நலம். அது உங்கள் படுக்கை அறையாக இருக்கலாம்; அல்லது, கடற்கரையாகக் கூட இருக்கலாம்.

ஒரு காகிதத்தை எடுத்து, அதில் உங்களுக்குப் பிடித்த, நீங்கள் வாழ்வில் செய்ய ஆசைப்படும் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். இதை எழுதுவதன் மூலம் உங்கள் கவனம் திசைத் திரும்பும். முடிந்தால் உடனே முயற்சி செய்து பாருங்கள். அதில் முழுமனதாக ஈடுபடுங்கள். பிடித்த விஷயத்தை செய்வதைக் காட்டிலும் சிறந்த மனப்பயிற்சி எதுவும் இல்லை.

செய்யக்கூடாதவை:
வெறுமை குடிகொள்ளும் வேளைகளில் முடிந்தவரையில், மனிதர்களிடம் இருந்து விலகியிருத்தல் நலம். எல்லோராலும் இந்த மனநிலையைப் புரிந்து கொள்ள இயலாது. தனிமையில் இருப்பதன் மூலம் வீண் விவாதங்களையும், மனக்கசப்பையும் தவிர்க்கலாம்.

அந்த நேரத்தில், சமூக வலைத்தளம் செல்வதைத் தவிர்க்கவும். நீங்கள் சோகமாக இருக்கும் அந்த நிமிடம், வலைத்தளத்தில் யாரேனும் மகிழ்ச்சியுடன் இருக்கும் அவர்களின் வாழ்க்கைத் தருணங்களைப் பதிவிட்டிருந்தால், உங்கள் மனம் உங்களையும் அவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கும். இது மன அழுத்தத்தை உண்டாக்கும்.

மனதில் வெறுமை குடிகொள்ளும் நேரங்களில், உங்கள் வாழ்வில் நடந்த எந்தவொரு எதிர்மறையான விஷயத்தையும் நினைத்துப் பார்த்தலோ, அசைபோடுதலோ கூடாது. அது இந்த மனநிலையை இன்னும் தீவிரமடையச் செய்யும்.

மனநலம் என்பது உடல்நலத்திற்கு ஆணிவேர். எனவே, அது குறித்து அலட்சியமாக இருக்காமல், தனிக்கவனம் செலுத்தி, மனநலம் காப்போம்! 

Next Story