மன மகிழ்ச்சியை உண்டாக்கும் இரக்க குணம்!


மன மகிழ்ச்சியை உண்டாக்கும் இரக்க குணம்!
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 AM GMT (Updated: 6 Nov 2021 10:50 AM GMT)

கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். இதன் காரணமாகவே மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே, கருணை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.

லக இரக்க குண தினம், நவம்பர் 13. நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும் இரக்க குணம் குறித்த தகவல்களை பார்க்கலாம். கருணை என்பது மனதில் தோன்றும் நேர்மறையான எண்ணம் ஆகும். 

‘நீங்கள் இரக்க குணம் உடையவர் என்றால், நிச்சயம் வலிமையான நபராகத்தான் இருப்பீர்கள். இரக்கமுடைய நபர் மென்மையான மனம் கொண்டவர் என்பதால், அவரை வலிமையற்றவராக கருத முடியாது’ என முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார்.

இரக்க குணத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்:

இரக்கம், அனைவருக்கும் அடிப்படையாக இருக்க வேண்டிய உணர்வாகும். பிறர் நலன் குறித்து யோசிக்காமல் இருப்பது, நம்பிக்கையற்ற செயல் என்பதை உணர வேண்டும்.

கருணை உணர்வோடு இருப்பதற்கும், மனிதனுடைய ஆயுளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எவர் மீதும் கருணை இல்லாமல், நம்பிக்கை இல்லாமல், விரோத மனப்பான்மையை கையாண்டால் நிச்சயம் உங்களுக்கு ஆயுள் குறையக்கூடும்.

இரக்க உணர்வின் நன்மைகள்:

கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். இதன் காரணமாகவே மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே, கருணை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?
கருணையுடன் இருப்பது என்பது, பிறருடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதில் இருந்து தொடங்குகிறது. ஒருவர் உங்களிடம் அவரது பிரச்சினை குறித்து பேசினார் என்றால், அதை அமைதியாகக் கேட்டுக்கொள்ளுங்கள். 

உங்களிடம் ஒருவர் கடுமை காட்டினால்கூட, பதிலுக்கு கடுமையாக நடந்துக்கொள்ளாமல் பிரச்சினைகளை தவிர்த்து விடுங்கள். இந்த செயல்பாடு உங்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு, அந்த இடத்தில் உங்கள் கருணையும் வெளிப்படும்.

தேவையில்லாத சிரமங்கள் ஏற்படும்போது, கோபம் கொள்வது இயல்பானதுதான். அதை தக்க சமயத்தில் கட்டுப்படுத்துவதற்கு கருணை உணர்வு உங்களுக்கு உதவலாம். 

அலுவலகம், நண்பர்கள், குடும்பம் என மனிதர்கள் கூடும் இடத்தில் யாரேனும் தனித்து விடப்பட்டிருந்தால் அவர்களிடம் கருணை காட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள். இரக்க உணர்வோடு இருப்பது நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மைகளை கொடுக்கக்கூடியது.  

Next Story