நாமக்கல்லில்தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்


நாமக்கல்லில்தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 19 July 2023 12:04 AM IST (Updated: 19 July 2023 3:37 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா கடந்த 1967-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிட்டார். இந்த நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அதன்படி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் அரசு ஆஸ்பத்திரி, பஸ்நிலையம் வழியாக குளக்கரை திடலை வந்தடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

தொடர்ந்து நாமக்கல் நகராட்சி குளக்கரை திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் ராஜேஸ்குமார் எம்.பி. திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, நகர்மன்ற 10-வது வார்டு உறுப்பினர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜோதி, நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வடிவேல், மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ்கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story