ரத சப்தமி விழா: திருமலையில் விரிவான ஏற்பாடுகள்


தினத்தந்தி 3 Feb 2025 4:02 PM IST (Updated: 3 Feb 2025 4:06 PM IST)
t-max-icont-min-icon

ரத சப்தமி அன்று காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

திருப்பதி:

சூரிய பகவானின் அவதார தினமான ரத சப்தமி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரத சப்தமி நாளில் பெருமாள் கோவில்களில் சூரிய பிரபை வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

அவ்வகையில், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ரத சப்தமி மினி பிரமோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரத சப்தமி நாளில் சூரிய பிரபை வாகனம், சின்னசேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திர பிரபை வாகனம் என, காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ரத சப்தமி வாகன சேவைகளை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பக்தர்களின் நலன் கருதி நான்கு மாட வீதிகளின் இருபுறமும் உள்ள கேலரிகளில் பந்தல்கள் (ஜெர்மன் ஷெட்) அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் ஆகியவை தொடர்ந்து வழங்குவதற்காக சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பக்தர்களுக்கு டீ, காபி, பால், மோர், குடிநீர், சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை மற்றும் பொங்கல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகன சேவைகளை திருமலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கண்டு தரிசிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாட வீதிகளில் ரங்கோலி வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தரையில் வெள்ளை நிற குளிரூட்டும் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர், காவல்துறையினர், சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


Next Story