சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சின்னம்பேடு கிராமம் என்றழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அருகில், ஆனந்தவல்லி அம்பிகை உடனாகிய அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவில் உள்ளது.

இத்திருக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. கடந்த 1-ம் தேதி முதல் கிராம தேவதை வழிபாடு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ஸ்ரீ நவக்கிரக ஹோமம், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், நாடி சந்தானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

கும்பாபிஷேகம்

யாகசாலை பூஜையின் நிறைவாக, இன்று காலை 8 மணிக்கு மகாபூர்ணாகுதி, யாத்ராதானம் நடைபெற்றது. இதன் பின்னர், திருக்கோவிலின் உதவி ஆணையர் சிவஞானம், திருக்கோவிலின் தலைமை குருக்கள் ஆனந்தன் சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியம் முழங்க பிரகார புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் விமான கோபுரங்கள், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வேத விற்பன்னர்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதையடுத்து நாளை முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com