திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ம் நாள்: தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் வீதிஉலா


கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாக சாலை பூஜைகளுடன் நேற்று தொடங்கியது. யாகசாலையில், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பூத சுத்தி, கும்ப பூஜை, ஹோம பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால தீபாராதனை நடந்த பின் யாகசாலையில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள், மேள வாத்தியங்களுடன், சண்முக விலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், சுவாமி-அம்பாள்கள் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. சுவாமியும்- அம்பாள்களும் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

விழாவின் 2-ம் நாளான இன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது.

மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்கள், மேளவாத்தியங்களுடன், சண்முக விலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4.30 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது. பின்னர் ஜெயந்திநாதர் கிரிவீதி உலா வந்து திருக்கோவிலை அடைகிறார்.

1 More update

Next Story