மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதி 191 இடங்களாக அதிகரிப்பு + "||" + Increase in restricted area to 191 seats

தடை செய்யப்பட்ட பகுதி 191 இடங்களாக அதிகரிப்பு

தடை செய்யப்பட்ட பகுதி 191 இடங்களாக அதிகரிப்பு
கொரோனா வேகமாக பரவுவதால் தடைசெய்யப்படட் பகுதி 191 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 முதல் 500 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் கொரோனா வார்டுகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா நோய் தொற்றால் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தடை செய்யப்பட்ட 191 இடங்கள்

மாவட்டத்தில் ஒரே வீதியில் 3 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்யப்படுவதோடு அந்த பகுதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து கொரோனா தொற்று குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதன்படி விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 37 இடங்களும், திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 3 இடங்களும் மற்றும் ஊரக பகுதிகளான 151 இடங்களும் என மாவட்டம் முழுவதும் 191 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

இப்பகுதிகளில் கிருமி நாசினி திரவத்தால் நன்கு சுத்தம் செய்யப்பட்டதோடு அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கவும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாதவாறு இருக்கவும் அப்பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களை கண்டறியும் வகையில் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த பரிசோதனையின்போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உடனே அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள்

மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியே வரக்கூடாது என்பதால் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைத்திடும் வகையில் தன்னார்வலர் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கலெக்டர் ஆய்வு 

இந்நிலையில் நேற்று வானூர், ஒட்டை, தைலாபுரம் உள்ளிட்ட கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அருகில் வசிக்கும் நபர்களின் வீட்டிற்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் வீடு, வீடாக சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், பால் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்பதையும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடைபெறுவதையும் கலெக்டர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டார். அதுமட்டுமின்றி அங்குள்ள சாலைகளில் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.