பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நீட்' தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் - ஜூன் 20-ந்தேதி வரை நடக்கிறது

பயிற்சி முகாமில் 38 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நீட்' தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் - ஜூன் 20-ந்தேதி வரை நடக்கிறது
Published on

சென்னை,

'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நீட் தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் மறுதேர்வுக்கான குறுகிய கால பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, நீட் தேர்வில் பங்கேற்க இருக்கும் வெற்றி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான குறுகியகால பயிற்சி முகாம் அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. 38 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த முகாமில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாடவாரியாக பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட இருக்கின்றன.

இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள் வாயிலாக உறுதிசெய்ய வேண்டும். மாணவர்கள் வருகையை பதிவேட்டில் உறுதிசெய்யவேண்டும். மாணவர்கள் கட்டாயம் பள்ளிச் சீருடையிலும், அடையாள அட்டை அணிந்தும் பங்கேற்கவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com