சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: தொட்டபெட்டாவில் போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக தொட்டபெட்டாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: தொட்டபெட்டாவில் போக்குவரத்து நெரிசல்
Published on

ஊட்டி,

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வாகனங்களில் வருகை தருகின்றனர்.

ஊட்டி தொட்டபெட்டா மலைசிகரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்த மலைசிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. அங்கு தொலைநோக்கி இல்லத்தில் பொருத்தப்பட்டு இருந்த நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை, அடர்ந்த வனப்பகுதிகள், அணைகள், கர்நாடகா மாநில எல்லை உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

உயரமான மலைசிகரத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள். மேலும் அவர்கள் மலைசிகரத்தின் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பச்சை பசேல் என காட்சி அளித்த அடர்ந்த தொட்டபெட்டா வனப்பகுதியை பார்வையிட்டனர். ஒரே நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாகனங்களில் தொட்டபெட்டாவுக்கு வந்தனர்.

இதனால் அங்கு வாகன நிறுத்துமிடம் நிரம்பி வழிந்தது. அதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தினர். அதன் காரணமாக கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊட்டி-கோத்தகிரி சாலை சந்திப்பில் இருந்து தொட்டபெட்டாவுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. நிறுத்தப்பட்ட வாகனங்களால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கோத்தகிரி சந்திப்பில் இருந்து தொட்டபெட்டாவுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் திட்டமிட்டப்படி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் பாதியிலேயே திரும்பி சென்றனர்.

அதேபோல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தேயிலை பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அதனால் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com