

சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. வேலைவாய்ப்பு வழங்கக்கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், கண்மாயை மராமத்து செய்வது, சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது குறித்தும் கூட்டத்தில் ஏராளமானோர் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள், தங்களுக்கு தெரியாமலேயே வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்து தங்களது பெயரை நீக்கி உள்ளதாகவும், சாதாரண கூலி வேலை செய்பவர்களை கூட அந்த பட்டியலில் இருந்து நீக்கி உள்ளதாகவும், இதன் காரணமாக தங்களுக்கு ரேஷன்கடையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று ரேஷன் கடையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும், எனவே இதுகுறித்து மறுவிசாரணை செய்து உண்மையான பயனாளிகளுக்கு ரேஷன்கடைகளில் எப்போதும் போன்று பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். அவர்களிடம், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி உறுதி அளித்தார்.
சிவகங்கை ஒன்றியம் நாலுக்கோட்டையைச் சேர்ந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் செயல்படும் ரேஷன்கடையில் பணியாற்றும் விற்பனையாளர் உரிய முறையில் பொருட்கள் வழங்குவது இல்லை என்றும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மதியழகன், சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர், இந்த பிரச்சினையில் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதன்பின்னர், கல்லல் ஒன்றியம் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது பெயரை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேசி, இந்த பிரச்சினையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தனர்.
இதன் பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அடுத்தடுத்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு 2 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.