கொல்லிமலை வல்வில் ஓரி விழாவில் மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கொல்லிமலை வல்வில் ஓரி விழாவில் மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நேற்று வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அங்குள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி அங்குள்ள கண்ணாடி மாளிகையில் ஜெர்பிரா, லில்லியம், கிளாடியோலை, டெய்சி, ஆந்தூரியம், கோல்டன்ராடு உள்ளிட்ட 10 வகையான பூக்கள் கொண்டு மலர் படுக்கை மற்றும் கொய்மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் 5 நிறங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ரோஜா பூக்களால் சோட்டாபீம் போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது சிறுவர், சிறுமிகளை மிகவும் கவர்ந்தது. இதுதவிர காய் கறிகள், பழங்கள் மற்றும் கொல்லிமலையில் விளையும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களை கொண்டு கோழிப்பண்ணை மாதிரி, கன்றுடன் உள்ள பசு போன்ற கோமாதா உருவம், கொக்கு உள்ளிட்ட பறவைகளும் வடிவமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. முள்ளங்கி மற்றும் கேரட்டால் உருவாக்கப்பட்ட கோமாதா உருவம் தத்ரூபமாக இருந்தது.

மேலும் மலர்களால் உருவாக்கப்பட்ட வீட்டு மாடி காய்கறி தோட்டம், செல்பி புகைப்பட ஆர்வலர்களை கவரும் வகையில் இதய வடிவிலான பூக்களால் ஆன அலங்காரம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்தது. இதுதவிர கொல்லிமலையில் விளையும் மிளகு, காபி, காய்கறிகள், பழங்கள் போன்றவையும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

இந்த மலர் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தார். இந்த கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு கண்டு களித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com