

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். கொடைக்கானலையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை அடிக்கடி நகர்ப்பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை தாக்கியும் அச்சுறுத்தியும் வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் ஏரிச்சாலை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் ஒரு காட்டெருமை பகல் நேரத்திலேயே உலா வருகிறது. இதை பார்த்து சுற்றுலா பயணிகள் பீதி அடைகின்றனர். மேலும் இந்த காட்டெருமை சைக்கிள்களில் உலா வரும் சுற்றுலா பயணிகளை தாக்க முயற்சிக்கிறது நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் கீழ்பூமி என்ற இடம் அருகே தனியாக வந்த ஒரு காட்டெருமை சுற்றுலா பயணிகளை விரட்ட தொடங்கியது. பின்னர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து அந்த காட்டெருமை அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
எனவே கொடைக்கானல் நகருக்குள் உலா வரும் காட்டெருமைகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.