

பரமத்திவேலூர்:-
பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வு பிரசார வாகன பேரணி நடந்தது. பேரணிக்கு பரமத்தி வட்டார கல்வி அலுவலர் கவுரி தலைமை தாங்கினார். பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணி பள்ளி முன்பு இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றியோர், புற உலக சிந்தனையற்றோர், காதுகேளாதோர், பார்வை குறைபாடு, மூளை முடக்குவாதம், தசை இயக்க குறைபாடு உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமிற்கு வருபவர்கள் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேசன் கார்டு நகல் மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் வருமாறும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கியும் அறிவுறுத்தப்பட்டது.