

திருப்பூரில் பேக்கரி ஊழியரை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பேக்கரி தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் வயது28. இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நவீன்குமார் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் வசித்து வந்தார். மேலும் நவீன்குமார் அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நவீன்குமாருக்கும், அவருடைய மனைவி சகுந்தலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை அடுத்த அம்மன்நகர் பாலாஜிநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த நவீன்குமாரின் அண்ணனான பனியன் நிறுவன தொழிலாளி ராம்குமார் 30 முத்தூர் வந்து அவர்களை சமாதானம் செய்து அறிவுரை கூறிவந்தார். மேலும் தம்பி குடும்பத்திற்கு தேவையான சில உதவிகளையும் ராம்குமார் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் மார்ச் 29 ந்தேதி வழக்கம் போல நவீன்குமாருக்கும் சகுந்தலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலறிந்த ராம்குமார் திருப்பூரில் இருந்து முத்தூருக்கு சென்றார். பின்னர் அவர் இப்படி அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறீர்களே என்று கூறி நவீன்குமார், சகுந்தலா மற்றும் இவர்களது 2 மகன்களை திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு ராம்குமார் அழைத்து வந்தார். பின்னர் தம்பி என்ற முறையில் நவீன்குமாருக்கு அறிவுரை கூறியதுடன் கண்டித்துள்ளார்.
தகராறு
அப்போது நவீன்குமார் தனது அண்ணன் ராம்குமாரிடம், எப்போதும் எனது மனைவிக்கு ஆதரவாகவே பேசுகிறாய். அப்படியென்றால் நீ அவளை வைத்திருக்கிறாயா? என்று கேட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். ஒருகட்டத்தில் ராம்குமார் ஆத்திரமடைந்து நவீன்குமாரின் தலைமுடியை பிடித்து இழுத்து தலையை தரையில் மோதச் செய்தார். இதில் படுகாயமடைந்த நவீன்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் நவீன்குமார் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.
கொலை வழக்கமாக மாற்றும்
இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நவீன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து 15 வேலம்பாளையம் போலீசார் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் அண்ணனே தம்பியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.