குண்டும்குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குண்டும்குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குண்டும்குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
Published on

ஆவடி,

ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 1993-ம் ஆண்டு கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இங்குள்ள 5 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இதில் 40-வது வார்டு செக்டர் - 1 பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தொடங்கப்பட்டபோது சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும்குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ஆவடியில் பல இடங்களில் நகராட்சி நிர்வாகத்தால் புதிய சாலைகள் போடப்பட்டாலும் இந்த பகுதி சாலையை மட்டும் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை.

இதனால் முதியவர்கள், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தொடங்கப்பட்ட நாளில் போடப்பட்ட சாலை அப்படியே உள்ளது. பழுதடைந்த இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை பொதுமக்கள் சார்பில் ஆவடி நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தோம் ஆனாலும் இதுவரை சாலைகள் சீரமைக்கப்படவில்லை.

திடீரென நகராட்சி அதிகாரிகள் வந்து சாலை ஓரங்களில் இடித்து விட்டு புதிய சாலை அமைக்கப்படும் என்று கூறிவிட்டு சென்று விட்டனர். ஆனால் சாலை அமைக்கவில்லை. சாலை அமைத்து விட்டதாக கூறி அதிகாரிகள் போலி ரசீது தயாரித்து மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வந்த வேட்பாளர்களிடம் சாலை போட்டு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் ஆனால் இதுநாள் வரை எங்கள் பகுதியில் சாலை அமைக்கவில்லை. இதனால் சாலை சீராக இல்லாமல் மேடும் பள்ளமுமாக உள்ளது. பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்ட இடங்கள் குண்டும்குழியுமாக உள்ளது.

இதனால் சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். பழுதடைந்த சாலையால் முதியவர்கள் நடந்து செல்லும்போது கீழே விழுந்து விடுகின்றனர். இதுபோல தினமும் பலர் காயம் அடைகின்றனர். சில நேரங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கூட கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ஆவடி நகராட்சி அதிகாரிகள் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com