

பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியில் பிரசித்தி பெற்ற புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன்பு சகாயமாதா சிலையின் கீழ் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்ததும் ஆலயத்தை நிர்வாகிகள் பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை வந்துபார்த்தபோது, கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஆரோக்கியராஜ் மற்றும் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆலயத்தின் அருகில் உண்டியலை உடைக்க பயன்படுத்தப்பட்ட இரும்பாலான திரிசூலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா
ஆலயத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலய உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.