

சேலம்,
போராட்டம்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ்கள் ஓடவில்லை
சேலம் மாவட்டத்தில் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 75 சதவீதம் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்ற பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சேலம் மாநகரில் மெய்யனூர், ஜான்சன்பேட்டை, மணக்காடு, எருமாபாளையம் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பெரும்பாலான அரசு பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு மிக குறைவான அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. ஆனால் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால் அதில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சேலம் பழைய பஸ் நிலையத்தில் ஒருசில டவுன் பஸ்கள் மட்டும் இயங்கின.
ஆட்டோக்கள்
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களும் கலந்து கொண்டதால் சேலத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளை வழக்கம்போல் ஏற்றி செல்ல வராததால் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.