

மும்பை,
காரட் சிப்லூன் ரெயில் வழித்தட திட்ட நிதியை புல்லட் ரெயில் திட்டத்துக்கு அரசு மாற்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்மந்திரியுமான பிரிதிவிராஜ் சவான் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சத்தாரா மாவட்டம் காரட் சிப்லூன் இடையே ரூ.3 ஆயிரத்து 195 கோடி செலவில் ரெயில் வழித்தடம் அமைப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டு கடந்தும், அதற்கான பணி இன்னமும் தொடங்கவில்லை. இதனால், அந்த நிறுவனம் விலகி கொண்டது.
ஆகையால், காரட் சிப்லூன் ரெயில் வழித்தட திட்ட நிதியை மும்பை ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு அரசு மாற்ற அரசு முடிவு எடுத்திருக்கிறது. எனினும், நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு, இந்த மதிப்பீட்டில் கணக்கிடப்படவில்லை. இந்த நிதியை மராட்டிய அரசு அதன் கருவூலத்தில் இருந்து செலுத்த வேண்டும்.
புல்லட் ரெயில் வழித்தடத்தில் வெறும் 24 சதவீதம் தான் மராட்டியத்தில் கடந்து செல்கிறது. அதற்காக குஜராத்துக்கு நிகரான செலவை நாங்கள் ஏன் செலவிட வேண்டும்?
புனே மற்றும் நாக்பூர் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒரே நேரத்தில் தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. நிதின் கட்காரி மத்திய மந்திரியாக பதவி ஏற்ற கையோடு, பிரதமர் மோடியை நாக்பூர் அழைத்து வந்து, அங்கு மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைக்கு அங்கு மெட்ரோ ரெயில் திட்ட பணி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது.
நிதி பற்றாக்குறை காரணமாக வளர்ச்சி பணிகளுக்கு 30 சதவீதம் நிதியை குறைத்து இருப்பதாக மாநில அரசு சொல்கிறது. உண்மையில் 50 சதவீத நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. பாரதீய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது மாநில அரசின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.
இவ்வாறு பிரிதிவிராஜ் சவான் தெரிவித்தார்.