

தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உபயதாரர்கள் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர் தேக்கு மரத்தால் செய்யப்பட்டு, கலை நுட்பத்துடன் மரச்சிற்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தேரின் அடிப்பகுதியில் தசாவதாரமும் சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேரின் மேற்பகுதியில் தங்க முலாம் பூசிய கலசமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜைகளும், புதிய தேருக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. பின்னர் புதிய தேருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.