இடத்தகராறில் இரு தரப்பினர் மோதல்

இடத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து 2 பேரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
இடத்தகராறில் இரு தரப்பினர் மோதல்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே இடத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து 2 பேரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதல்

ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மனைவி வள்ளிமயில்(வயது 65). இவரின் நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் கியாஸ் குடோன் வைத்திருந்தார். இதற்கான பங்குத்தொகையை முறையாக கொடுக்காததால் வள்ளிமயில் இடத்தை காலிசெய்யும்படி கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் வீடுபுகுந்து வள்ளிமயிலை தாக்கினர். இதில் படுகாயமடைந்த வள்ளிமயில் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி அறிந்த அவரின் தம்பிகள் சண்முகவேலு(55), முனியசாமி (60) ஆகியோர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர். அப்போது ஆஸ்பத்திரி அருகில் குருமூர்த்தி தரப்பினர் வருவதாக அறிந்து அங்கு சென்று வள்ளிமயில் மீது நடந்த தாக்குதல் குறித்து கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் ஆஸ்பத்திரிக்கு இருவரும் திரும்பி வந்தபோது அந்த கும்பல் ஆத்திரத்தில் பின்தொடர்ந்து வந்து சரமாரியாக தாக்கினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே கலவர பகுதியாக மாறியது.

கத்திக்குத்து

கத்தியால் குத்தியதில் சண்முகவேலு மற்றும் முனியசாமி படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரி முன்பு தங்களை வழிமறித்து தாக்கியதாக குருமூர்த்தி தரப்பினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக வள்ளிமயில், சண்முகவேலு, குருமூர்த்தி தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கருங்குளத்தை சேர்ந்த தியாகராஜன் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்டதாக 19 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு இந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அனைவரையும் கலைந்து போகசெய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com