

ஈரோடு
முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. ரோடுகள் வெறிச்சோடின.
கோபி
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, கடைவீதி, மொடசூர் ரோடு, சத்தி மெயின் ரோடு, அளுக்குளி, காசிபாளையம், கொளப்பலூர், கெட்டிச்செவியூர், சிறுவலூர், பொலவகாளிபாளையம், கூகலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி ரோடுகளில் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்தனர்.
பெருந்துறை
இதேபோல் பெருந்துறை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள், பால் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க் களைத் தவிர, வேறு எந்தவொரு கடைகளும் திறக்கப்படவில்லை. பெருந்துறை தினசரி மார்க்கெட் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கே மூடப்பட்டதால், மார்க்கெட் வளாகம் அமைதியாக காட்சியளித்தது. பெருந்துறை பஸ் நிலையத்தில் இருந்த ஓட்டல், பேக்கரி கடைகள், சில்லரை விற்பனை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் எதுவும் ஓட வில்லை.
ஆட்டோ, வாடகை கார்கள் முதலானவை இயங்கவில்லை. பெருந்துறை நகரின் முக்கிய வீதிகளான குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, ஈரோடு ரோடு, கோவை ரோடு, சென்னிமலை ரோடு முதலானவைகளில் போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. முக்கிய சாலை சந்திப்பான, பவானி ரோடு அண்ணா சிலை சந்திப்பு ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதே போல் முக்கிய வீதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், அந்த ரோடுகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கொடுமுடி
கொடுமுடியில் பெட்ரோல் பங்க்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை செய்யும் நிலையங்கள் தவிர மற்ற வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி சுற்றி திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கொடுமுடி பழைய பஸ் நிலையம், முக்கிய கடைவீதி, கோவில் பகுதி, சாலைப்புதூரில் உள்ள கரூர்- ஈரோடு பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் நிலையம், சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலை, பவானிசாகர் ரோடு, நம்பியூர் ரோடு ஆகிய ரோடுகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள மளிகை, ஓட்டல், ஜவுளி, பேக்கரிகள், பூ மார்க்கெட், பல்பொருள் அங்காடி, தினசரி மார்க்கெட் அனைத்தும் மூடப்பட்டது. சத்தியமங்கலம் கடைவீதி முற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் வெறிச்சோடியது. பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையம் முழுவதும் வெறிச்சோடி கிடந்தது. மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பவானி
பவானி பஸ் நிலையத்தில் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. டீக்கடைகள், ஓட்டல் கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. ஓரிரு மருந்துக் கடைகளைத் தவிர வேறு எதுவும் திறக்கப்படாமல் பவானி நகரமே முற்றிலும் வெறிச்சோடி இருந்தது.
வழிபாட்டுத்தலங்களான தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகளில் வழிபாடுகள் இல்லாமல் வாசல்கள் அடைக்கப்பட்டிருந்தன.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம், கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், தாமரைப்பாளையம், ஆகிய பகுதிகளில் நேற்று அனைத்து வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பேக்கரி, டீக்கடைகள், சலூன்கள், இறைச்சி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அந்தியூர்
அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல் ஆகிய பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பால், மருந்து கடைகள், பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள் மட்டுமே திறந்திருந்தன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ரோடுகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னிமலை
சென்னிமலையில் மருந்து கடைகள், பால் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் மதியத்திற்கு மேல் ஒரு சில மருந்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.
நேற்று சென்னிமலை வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். அவர்கள் சென்னிமலையில் ஆங்காங்கே மூடப்பட்டிருந்த கடைகளுக்கு முன்பு கூட்டமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை உண்டு ஓய்வு எடுத்து சென்றனர்.