கடலூர் மாவட்டத்தில், 3 வயது பெண் குழந்தைக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கடலூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில், 3 வயது பெண் குழந்தைக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் வெளிநாடு சென்று வந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கொரோனா அறிகுறி காணப்பட்ட 40 பேரின் உமிழ் நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இவர்களில் 6 பேரின் பரிசோதனை அறிக்கை நேற்று வந்துள்ளது.

இதில் 3 வயது பெண் குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. விருத்தாசலத்தை சேர்ந்த அந்த குழந்தை, டெல்லி மாநாடு சென்று வந்த ஒருவரின், உறவினர் குழந்தையாகும் என சுகாதாரத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த குழந்தை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.

மேலும், கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை டெல்லி மாநாடு சென்று வந்தவர்களுடன் முதன்மை தொடர்பில் இருந்தவர்கள் 73 பேர், 2-ம் நிலை தொடர்பில் இருந்தவர்கள் 19 பேர் என மொத்தம் 92 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்.

இதில் 90 பேரின் உமிழ்நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இதுவரை 11 பேரின் பரிசோதனை அறிக்கை வந்துள்ள நிலையில், ஒருவருக்கு கொரோனா உள்ளது. மீதமுள்ள 10 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை. இன்னும் 79 பேரின் பரிசோதனை அறிக்கை வரவேண்டியுள்ளது. நேற்று கொரோனா அறிகுறி தென்பட்ட 29 பேரின் உமிழ் நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் என மொத்தம் 206 பேரின் உமிழ்நீர் மாதிரி சேகரித்து இதுவரை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 102 பேரின் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.

இவர்களில் மொத்தம் 14 பேருக்கு கொரோனா இருப்பதும் 88 பேருக்கு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர இன்னும் 104 பேரின் பரிசோதனை அறிக்கை முடிவு வர வேண்டியுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com