கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை–பணம் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை

கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை–பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை–பணம் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை
Published on

கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் நேருநகரை சேர்ந்தவர் சேகர்(வயது 65). இவருடைய மனைவி தையல் நாயகி. இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆவர். இவர்களுக்கு கார்த்திக்கமல் என்ற மகனும், விமலி என்ற மகளும் உள்ளனர். கார்த்திக்கமல் சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். விமலி தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் சேகரும், தையல்நாயகியும் சென்னையில் வசித்து வரும் தங்களது மகன் மற்றும் மகளை பார்ப்பதற்காக சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் வேலைக்கார பெண் அரசாயி, சேகர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது பற்றி அவர் சேகருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அறையில் இருந்த பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 22 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் யாரோ மர்மநபர்கள் கடப்பாறையால் சேகர் வீட்டின் கடற்பாரை கம்பியால் பூட்டை உடைத்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

மேலும் கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலக்க போலீஸ் மோப்பநாய் புருனே வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. படுக்கை அறையில் இருந்த பீரோ மற்றும் கதவுகளில் உள்ள ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்ததோடு, தடயங்களையும் சேகரித்து சென்றனர்.

ஏற்கனவே சேகர் வீட்டில் கடந்த 2014ம் ஆண்டில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். தற்போது 2வது முறையாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்குமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com