அ.தி.மு.க. பிரமுகர் வீடு உள்பட 3 வீடுகளில் நகை- பணம் கொள்ளை
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சி மெயின்ரோட்டில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் தாஹீர் நிஷா (வயது42). அ.தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர். தாஹீர் நிஷா நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தாஹீர் நிஷாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் இருந்த 3 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
அதே குடியிருப்பில் வசித்து வருபவர் சிவநேசன் மனைவி பாலசங்கீதா(35). இவர் அங்கன்வாடியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளனர். இதை தொடர்ந்து பாலசங்கீதா வீட்டின் அருகே வசித்து வரும் யூசிப்ரகுமான்(37) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.4,500 மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு சென்ற போது அருகில் இருந்த எல்.ஐ.சி. அலுவலர் மலர் வண்ணன் என்பவரது வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கமல்ராஜ், வீரப்பரஞ்சோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், திருவாரூரில் இருந்து மோப்பநாய் மெர்ஸி கொண்டு வரப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடங்களில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு விட்டுக்கட்டி அருகே வருவாய் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து அவரது குடும்பத்தினரை தாக்கி விட்டு மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதே போல அந்த பகுதியில் உள்ள மாதாகோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. கடந்த 1 மாதத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஈடுபட்டுள்ள கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

